கோவை மாவட்டத்தில் ஜூலை மாதத்தில் வரும் 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (ஜூலை 3) அவர் கூறியதாவது:
"கோவை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணியில் மக்கள் நல்வாழ்வு, வருவாய், உள்ளாட்சி, காவல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து பணியாற்றி வருகின்றன.
கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் வரும் 31-ம் தேதி வரை தேவையான தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 5, 12, 19, 26-ம் தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) எவ்வித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, நாளை மறுநாள் (ஜூலை 5) மற்றும் 12, 19, 26-ம் தேதிகளில் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இந்நாட்களில் மருத்துவ சேவை, பால் மற்றும் மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும். வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வருவாய், மக்கள் நல்வாழ்வு, காவல், உள்ளாட்சித் துறை பணியாளர்கள் மட்டும் பணியில் இருப்பர்.
உழவர் சந்தைகள், மார்க்கெட், மளிகைக் கடைகள், மீன் மார்க்கெட், பூ மார்க்கெட், இறைச்சிக் கடைகள், டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் இயங்காது.
கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதிகளிலிருந்து யாரும் வெளியே வரவோ, இப்பகுதிகளுக்கு வெளி நபர் உள்ளே செல்லவோ அனுமதி இல்லை. அவசர மருத்துவ தேவை, மகப்பேறு போன்ற அவசிய தேவைகள் தவிர வேறு எந்தக் காரணத்துக்கும் வெளியே வரவோ, பிறர் இப்பகுதிக்குள் செல்லவோ அனுமதி கிடையாது.
வைரஸைக் கட்டுப்படுத்த அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள், வணிகர்கள், தொழில் நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் என அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.