தூத்துக்குடி அருகே கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி உயிரிழந்த நான்கு பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி அருகேயுள்ள செக்காரக்குடி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது வீட்டில் உள்ள கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த இசக்கிராஜா (17), பாலகிருஷ்ணன் (20), பாண்டி (28) மற்றும் ஆலங்குளத்தைச் சேர்ந்த தினேஷ் (20) ஆகிய 4 பேரும் நேற்று (ஜூலை 2) வந்தனர்.
முதலில் கழிவுநீரை மோட்டார் மூலம் வெளியேற்றி விட்டு, இசக்கிராஜாவும், பாண்டியும் தொட்டிக்குள் இறங்கியுள்ளனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் இருவரும் வெளியே வராததால், பாலாவும், தினேஷும் உள்ளே இறங்கியுள்ளனர். அவர்களும் நீண்ட நேரமாக வெளியே வரவில்லை.
இதையடுத்து வீட்டின் உரிமையாளர் சோமசுந்தரம் சிப்காட் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் அங்கு வந்த தீயணைப்புப் படை வீரர்கள் பாதுகாப்பான முறையில் தொட்டிக்குள் இறங்கிப் பார்த்தபோது விஷவாயு தாக்கி 4 பேரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று (ஜூலை 3) வெளியிட்ட அறிக்கை:
"தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், செக்காரக்குடி கிராமத்தில், தனியார் ஒருவருடைய வீட்டில் நேற்று கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்ய இறங்க முயன்றபோது, பாண்டி, இசக்கிராஜா, பாலகிருஷ்ணன் மற்றும் தினேஷ் ஆகிய நான்கு நபர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த நான்கு நபர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த நான்கு நபர்களின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாய் வழங்க தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன்".
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.