சாத்தான்குளத்தில் தந்தை - மகன் கொலை வழக்கில் அரசியல் தலையீடு ஏதும் இல்லை. நியாயமாகவே விசாரணை நடத்தி வருகிறோம் என சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று காலை ஐஜி சங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையில் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்னர். இன்னும் ஒருவர் கைது செய்யப்பட வேண்டும்.
தலைறைவாக உள்ள காவலர் முத்துராஜை தீவிரமாகத் தேடி வருகிறோம். விரைவில் அவரை கைது செய்து விடுவோம். அவர் அப்ரூவர் ஆகிவிட்டார் என்ற தகவல் தவறானது.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அழிக்கப்பட்ட சில சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளன. அதனை இன்று ஆய்வு செய்யவுள்ளோம்.
இந்த வழக்கு தொடர்பாக பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை சேர்ந்தவர்களையும் விசாரிக்க திட்டமிட்டுள்ளோம்.
இந்த வழக்கில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை. நியாயமான முறையில் விசாரித்து வருகிறோம் என்றார் அவர்.
சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரித்தது. இதற்கிடையில் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
ஆனால், சிபிஐ விசாரணை தொடங்குவதற்குள் சாட்சிகளை அழிக்க வாய்ப்புள்ளதால் தற்காலிகமாக சிபிசிஐடி வழக்கை விசாரிக்கலாம் என உயர் நீதிமன்றம் கூறியது.
வழக்கு விசாரணையைத் தொடங்கிய சிபிசிஐடி, முதல் தகவல் அறிக்கையில் திருத்தம் செய்து கொலை வழக்காக மாற்றியது. ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்னர்.