தமிழகம்

வெளியூர்வாசிகள் வேற்றுக் கிரகத்தினர் அல்ல: ஆய்வாளர் சதீஷ் தரும் ஆறுதல் வார்த்தைகள்

கரு.முத்து

சென்னை உள்ளிட்ட வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குத் திரும்புகிறவர்களை ஏதோ வேற்றுக் கிரகவாசிகள் போல நடத்தும் மனப்பான்மை மக்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் தனிமைப்படுத்துதல் முகாமில் இருந்துவிட்டு வந்தாலும்கூட அவர்கள் குறித்துக் காவல்துறைக்கோ, சுகாதாரத் துறைக்கோ தகவல் கொடுத்துத் தவிக்க விடுகிறார்கள். இத்தனைக்கும் கரோனா தொற்று உள்ளவர்கள் தங்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளவும் தற்போது வழிகாட்டுதல் நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், தான் பணியாற்றும் திருவெண்காடு காவல் நிலைய எல்லைக்குள் சென்னையில் இருந்த வந்த ஒரு குடும்பம் குறித்துத் தான் எதிர்கொள்ள நேர்ந்த அனுபவத்தை ‘இந்து தமிழ்’ இணையத்திடம் பகிர்ந்து கொண்டார் காவல் ஆய்வாளர் சதீஷ். அது பொதுமக்கள் அனைவருமே தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு பாடம்.

"மூன்று நாட்களுக்கு முன்பு திருவெண்காடு பகுதியில் இருந்து எனக்கு போன் செய்த ஒரு நபர், ஒரு குடும்பம் சென்னையில் இருந்து அவரது கிராமத்திற்கு வந்திருக்கும் விவரத்தைத் தெரிவித்தார். நானும் அவரது தகவலுக்கு மதிப்பளித்து அந்த வீட்டிற்குச் சென்றேன். அங்கு, இரண்டு பெண் குழந்தைகளுடன் கணவன், மனைவி சென்னையில் இருந்து வந்திருப்பது தெரியவந்தது.

அப்போது என்னையும், எனது காவல் வாகனத்தையும் கண்டு சென்னையில் இருந்து வந்த தம்பதி, பயந்த விதம் என் மனதுக்குள் பெருத்த நெருடலை உண்டாக்கியது. நான் சீருடையில் போலீஸ் ஜீப்பில் போனதுதான் அவர்களது பயத்துக்குக் காரணம். பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் சினிமாவில் காண்பதுபோல் எங்களை எட்டிப் பார்த்தனர். இதனாலும் அவர்களுக்குச் சங்கடம் ஏற்பட்டதைப் பார்த்த நான், உடனே அந்தத் தம்பதியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.

பின்பு, ‘நீங்கள் கண்டிப்பாக நலமாக இருப்பீர்கள், ஆனாலும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் ஒருமுறை பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அது உங்களுக்கும், உங்களது குழந்தைகளின் உடல் நலத்திற்கும் நல்லது’ என்றேன். உடனே அந்த சகோதரி, ‘கண்டிப்பாக அண்ணா’ எனக் கூறிவிட்டு சிறிது நேரத்தில் அனைவரும் அவர்களது கார் மூலமாக மருத்துவமனைக்கு வந்து எங்களது உதவியுடன் பரிசோதனை செய்துகொண்டு மீண்டும் வீட்டிற்குத் திரும்பிவிட்டனர்.

இந்தச் சம்பவம் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் அதன் பிறகு, திருவெண்காடு காவல் நிலையத்தில் உள்ள காவலர்களிடம் ஏதேனும் சென்னை சார்ந்த நபர்கள் பற்றிய விவரத்தை யாரேனும் தெரிவித்தால் சாதாரண உடையில் ஒரு காவலர் மட்டும் சென்று விசாரிக்க வேண்டும் என அறிவுறுத்தினேன்.

இந்நிலையில், முன்பு போன் செய்த நபர் எனக்கு மீண்டும் அழைத்தார். ‘சார், அவர்களை டெஸ்ட் முடித்து ஏன் மயிலாடுதுறை தனியார் கல்லூரி குவாரண்டைனுக்கு அனுப்பவில்லை... ஏன் சிகிச்சைக்கு திருவாரூர் அழைத்துச் செல்லவில்லை?’ என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பித் திணற வைத்தார்.

அது மட்டுமில்லாமல் ‘டெஸ்ட் ரிசல்ட் வரும் வரை அவர்களை புத்தூர் கல்லூரியிலாவது தங்க உத்தரவிடுங்கள்’ என எனக்கு உத்தரவு போட்டார். கடைசியில் எனது செய்கை பற்றி உயர் அதிகாரிக்குத் தெரியப்படுத்தப் போவதாக மிரட்டத் தொடங்கினார். ‘தாராளமாகப் பேசுங்கள்... நம்பர் வேண்டுமானாலும் தருகிறேன்’ எனக் கூறினேன்.

நேற்று காலை, அந்தக் குடும்பத்தினர் அனைவருக்கும் நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்துவிட்டது. இந்தத் தகவலை என்னைத் தொடர்புகொண்டு தெரிவித்த சென்னை இளைஞர், நாங்கள் அவர்களிடம் நடந்து கொண்ட விதம் குறித்து மகிழ்வாய்ப் பேசி நன்றி தெரிவித்தார். அவரிடமிருந்து போனை வாங்கிய அவரது மனைவி, ‘அண்ணா நல்லா இருக்கீங்களா...?’ நாங்க இப்ப கவலைப்படுவது எங்களைப் பற்றி அல்ல, எங்களுக்கு உதவி செய்யப்போய் உங்களை அதிகாரிகள் ஏதாவது சத்தம் போட்டுவிடுவார்களோ என்றுதான் பயப்படுகிறோம்’ என்றார்.

கடைசியில், ‘அண்ணா நாங்க இன்னும் ஒரு மாதம் இங்கு இருப்போம். கண்டிப்பாக ஒருமுறை எங்க வீட்டுக்குச் சாப்பிட வாங்க. ஒரு காபி சாப்பிடவாவது எங்க வீட்டுக்கு வந்துட்டுப் போங்க அண்ணா’ எனப் பேசி முடித்தார் அந்த சகோதரி” என்று நெகிழ்வுடன் இந்த விஷயத்தைப் பகிர்ந்துகொண்டார் ஆய்வாளர் சதீஷ்.

“ 'இந்து தமிழ் திசை' மூலமாக பொதுமக்களுக்குச் சிறிய கோரிக்கை வைக்கிறேன். வெளியூர்களிலிருந்து யாரேனும் வந்தால் தகவல் அளியுங்கள். அந்த நபர்களின் சூழ்நிலை கருதி நாங்கள் நடவடிக்கை எடுப்போம். தற்போதைய சூழ்நிலையில் எங்களை ஏதோ அயல் கிரகத்து ஆசாமி போல் அவர்களிடம் நடந்துகொள்ள வற்புறுத்தாதீர்கள். ஒருவரின் எந்தச் செயல், எந்த கணம், அன்பை வன்மமாக உருமாற்றும் என்பதை யாரும் துல்லியமாகச் சொல்லி விடமுடியாது.

சென்னை மற்றும் வெளியூரிலிருந்து கிராமங்களை நோக்கி வந்திருப்பவர்களும் மனிதர்கள்தான்; அவர்களும் நம் உறவுகள்தான். இந்தச் சூழலில் அவர்களுக்கு நீங்களும் உதவும்போது, யாரோ சொன்னதுதான் என் நினைவுக்கு வருகிறது. முழு ஈடுபாட்டுடன் செயல்படுத்தப்படும் அத்தனை நல் கூட்டு முயற்சிகளும் கண்டிப்பாக ஒருநாள் கொண்டாடப்பட்டே தீரும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்'' என்று சொல்லி முடித்தார் ஆய்வாளர் சதீஷ்.

SCROLL FOR NEXT