தமிழகம்

கோயம்பேடு சந்தையில் படிப்பினை பெற்றும் பல நகரங்களில் காய்கறி சந்தைகள் கரோனா பரப்பும் அவலம்: அரசு மெத்தனமாக இருப்பதாக மக்கள் புகார்

செய்திப்பிரிவு

கரோனா தொற்று பரவல் தொடர்பாக கோயம்பேடு சந்தையில் படிப்பினை பெற்றும், தமிழகத்தில் பல்வேறு மாநகரங்களில் உள்ள காய்கறி சந்தைகள் மூலமாக கரோனா தொற்று பரவுவதை தடுக்காமல் அரசு மெத்தனமாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆசியாவின் மிகப்பெரிய சந்தையாக கோயம்பேடு சந்தை விளங்குகிறது. இந்த சந்தையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலர், காய்கறி, பழக்கடைகள் இயங்கி வருகின்றன. இந்த சந்தையில் வியாபாரிகள், பொதுமக்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் என சுமார் ஒரு லட்சம் பேர் தினமும் வந்து செல்கின்றனர். இவ்வளவு மக்கள் கூடும் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் கரோனா தொற்று வேகமாக பரவியது.

இந்த சந்தையை மையமாக கொண்டு, தொற்று ஏற்பட்டவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்ததால் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கு மேல் உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து கோயம்பேடு சந்தை மூடப்பட்டு காய்கறி சந்தை திருமழிசைக்கும் பழம் மற்றும் மலர் சந்தை மாதவரத்துக்கும் மாற்றப்பட்டன. இதேபோன்று சென்னையில் பல்வேறு பகுதிகளில் இயங்கி வந்த சில்லரை விற்பனை காய்கறி சந்தைகளும் திறந்தவெளி மைதானங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.

இதனிடையே மதுரை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட மாநகரப் பகுதிகளில் இயங்கி வரும் காய்கறி சந்தைகளில் நூற்றுக்கணக்கானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் படிப்பினைகளை பெற்றுள்ள நிலையில், பிற மாநகரப் பகுதிகளில் அதை செயல்படுத்தாமல் மெத்தனமாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், மணப்பாடு பகுதியில் அரசின் அறிவுறுத்தல்களை அனைவரும் முழுமையாக கடைபிடிப்பதால், அங்கு கரோனா தொற்று அறவே இல்லை. அரசின் அறிவுறுத்தல் மட்டுமல்லாது, அதை கடைபிடிப்பதில் பொதுமக்கள் ஒத்துழைப்பு மிக அவசியம். அனைவரும் முகக்கவசம் அணிந்தாலே தொற்று பரவலை குறைக்க முடியும். இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட உள்ளன. மாநகரப் பகுதிகளில் காய்கறி வியாபாரிகள், பெட்ரோல் பங்க்குகளில் பணிபுரிவோர், சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியாளர்கள் ஆகியோரை பரிசோதிக்க சுகாதாரத் துறை சார்பில் ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

SCROLL FOR NEXT