சென்னை மாநகரத்தில் வார்டுதோறும் தலா 2 இடங்களில் நடத்தப்படும் காய்ச்சல் பரிசோதனை முகாம்களால் தினமும் 40 ஆயிரம் பேர் பயன்பெற்று வருவதாக மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
மாநகராட்சி சார்பில் தேனாம்பேட்டை மண்டலத்தில் நடத்தப்பட்டு வரும் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை ஆணையர் கோ.பிரகாஷ் நேற்று ஆய்வுசெய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாநகரம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் சுமார் 35ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்படுகின்றனர். 14 நாட்கள் தனிமைக் காலம் முடிந்ததும், அவர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
மாநகராட்சி பகுதியில் தினமும் ஒவ்வொரு வார்டுக்கும் குறைந்தது தலா 2 காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகின்றன. தினமும் சுமார் 550 முகாம்கள், பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு மிக அருகில் நடத்தப்படுகின்றன. இந்த முகாம்கள் மூலம் தினமும் சுமார் 40 ஆயிரம் பேர் பயன்பெறுகின்றனர். இதுவரை 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்பெற்றுள்ளனர்.
இந்த முகாம்களுக்கு கரோனாஅறிகுறி இருந்தால் மட்டுமே வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பொதுவான பிரச்சினைகள் இருந்தாலும், மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறலாம். இதுபோன்ற காய்ச்சல் பரிசோதனை முகாம்கள், தெருக்களில் சீல் வைக்கும் நடவடிக்கைகள், வீடுகளில் தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளால்,தொற்று அதிக அளவில் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.