தமிழகம்

புதுக்கோட்டை சிறுமி கொலை: முதல்வர் இரங்கல், குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை, அறந்தாங்கியில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர், அவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று விடுத்துள்ள அறிவிப்பு:

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், ஏம்பல் கிராமத்திலிருந்து, 30.6.2020 முதல் காணாமல் போன சிறுமி, காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த நிலையில், 1.7.2020 அன்று மாலை வண்ணாங்குளம் என்ற ஊரணியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

இந்த கொடூர செயலுக்கு காரணமான குற்றவாளி கைது செய்து செய்யப்பட்டுள்ளார். குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையைப் பெற்றுத் தர துரித நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவருடைய குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT