ஈரானில் மீன்பிடி தொழிலுக்குச் சென்ற குமரி மீனவர்கள் உட்பட தமிழக மீனவர்கள் அடிப்படை வசதி இன்றி கரோனா அச்சத்தில் 6 மாதமாக தவித்த நிலையில், அவர்கள் கடற்படை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் அழைத்து வரப்பட்டனர்.
இவர்களில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 535 மீனவர்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து நாகர்கோவில் அழைத்து வரப்பட்டனர். மீனவர்கள் அனைவருக்கும் முதல்கட்டமாக நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியில் வைத்து ரத்த மாதிரி, மற்றும் சளி எடுத்து கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
பின்னர் தோவாளை, தூத்தூர், அதங்கோடு, தொலையாவட்டம், வெள்ளமோடி, கடியப்பட்டணம் ஆகிய இடங்களில் பள்ளி, கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தும் முகாமில் மீனவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
7 நாட்கள் தனிமைப்படுத்தப்படும் மீனவர்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக வீடுகளுக்கு அனுப்பப்படுவர்.
கரோனா தொற்று இருப்பவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்படுவர் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
6 மாதமாக கரோனா அச்சத்தில் ஈரானில் தவித்த தாங்கள் கன்னியாகுமரி வந்த பின்னரே நிம்மதி அடைந்ததாக மீனவர்கள் கூறினர்.