தமிழக அரசின் அறிவிப்பின்படி கோவை மாவட்டத்திலுள்ள கிராமப்புற கோயில்களில் மட்டும் நிபந்தனைகளுக்குட்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளைத் தவிர கிராமப்புறங்களில் உள்ள திருக்கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வரும் 1,459 திருக்கோயில்களில் ரூ.10,000 -க்கும் கீழ் வருமானம் பெறும் கிராமப் புறத்திலுள்ள 731 திருக்கோயில்களில் மக்கள் தரிசனம் செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கிராமக் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான விதிமுறைகளையும் விளக்கியுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:
• அனுமதிக்கப்பட்ட கிராமப்புற கோயில்களில் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
• திருக்கோயில் நுழைவு வாயிலில் தரமான கிருமிநாசினி கண்டிப்பாக வைத்து அனைத்து பக்தர்களுக்கும் கொடுத்துக் கைகளை சுத்தம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.
• பக்தர்கள் பொது வெளியில் எச்சில் உமிழ்தல் கூடாது.
•ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக் கொள்ளும் விதமாக கை குலுக்குதல் போன்ற உடல் ரீதியான தொடர்பைத் தவிர்க்க வேண்டும்.
• கால்களை நீரில் சுத்தம் செய்து பின் கிருமிநாசினி கொண்டு கைகளைச் சுத்தம் செய்த பின்பு திருக்கோயில் உள்ளே நுழைய வேண்டும். பக்தர்களின் உடல் வெப்பநிலை அறியும் தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதித்த பின்புதான் திருக்கோயிலின் உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டும்.
• நோய் அறிகுறி இல்லாத பக்தர்களை மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும்.
• சுவாமி சிலைகளைத் தொடுதல் கூடாது.
• பக்தர்கள் விட்டு செல்லும் முகக்கவசம், கையுறைகள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.
• கோயிலுக்கு வரும் பக்தர்கள் தேங்காய், பூ, பழம் ஆகியவற்றைக் கொண்டு வர அனுமதி இல்லை.
• திருக்கோயில்களில் திருமணம் நடத்த நினைத்தால் 50 நபர்களுக்கு மிகாமல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து நாளொன்றுக்கு ஒரு திருமணம் மட்டும் நடத்த அனுமதிக்கலாம்.
• தடைசெய்யப்பட்ட பகுதியில் இருந்து பக்தர்கள் வருவதை அனுமதிக்கக்கூடாது.
• 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் சுவாச நோய், இருதய நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கோயிலுக்கு வருவதைத் தவிர்த்திட வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.