தமிழகம்

கர்நாடக பந்த்: ஓசூரில் 553 பேருந்துகள் நிறுத்தம்

செய்திப்பிரிவு

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் கர்நாடகா புதிய அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதேபோல கோவா மாநிலத்தில் பாயும் மகதாயி ஆற்றில் கலசா - பண்டூரி என்கிற இடத் தில் கால்வாய் அமைக்க கோவா அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதையடுத்து தமிழகம், கோவா அரசு களைக் கண்டித்து கன்னட சலுவளி வாட்டாள் கட்சி மற்றும் கன்னட அமைப்பு களின் சார்பாக நேற்று கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

இதனால், தமிழகத்தில் இருந்து ஓசூர் வழியாக பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் 365 சேலம் கோட்ட அரசுப் பேருந்துகள், 103 தொலைதூர விரைவு பேருந்துகள், 85 விழுப்புரம் கோட்ட அரசுப் பேருந்துகள் என 553 பேருந்துகள் ஓசூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

இதேபோல் கர்நாடகா மாநிலத்தில் இருந்து இயக்கப்படும் 300-க்கும் மேற்பட்ட பேருந்துகள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நிறுத்தப்பட்டன. இதனால் பெங்களூர் எலெக்ட்ரானிக் சிட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாமல் பயணிகள், தொழிலாளர்கள் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

ஓசூரில் இருந்து தமிழக எல்லையான ஜூஜூவாடி வரை இயக்கப்பட்ட நகர பேருந்துகளில் சென்ற பயணிகள், அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் அத்திப்பள்ளிக்கு நடந்து சென்று ஆட்டோ, வேன்களில் தங்களது பயணத்தை தொடர்ந்தனர். மாலை 6 மணிக்கு பிறகு வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்பட்டன.

SCROLL FOR NEXT