மத்திய மண்டல காவல் துறையின் தலைவராக ஹெச்.எம்.ஜெயராம் 
தமிழகம்

புகார் அளிக்க வரும் மக்களை மிகவும் கண்ணியமாக நடத்த வேண்டும்; போலீஸாருக்கு மத்திய மண்டல ஐஜி உத்தரவு

ஜெ.ஞானசேகர்

புகார் அளிக்க வரும் மக்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என, காவல்துறையினருக்கு மத்திய மண்டல காவல் துறைத் தலைவர் ஹெச்.எம்.ஜெயராம் உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்டங்களை உள்ளடக்கிய மத்திய மண்டல காவல் துறையின் தலைவராக ஹெச்.எம்.ஜெயராம் இன்று (ஜூலை 2) பொறுப்பேற்றுக் கொண்டார்.

தொடர்ந்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

"மத்திய மண்டல மாவட்டங்களில் காவல் துறையினர் சட்டம்- ஒழுங்கை நிலைநாட்டி, குற்ற நடவடிக்கைகளை உடனடியாக தடுக்க வேண்டும். கரோனா பரவலைத் தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை சிறந்த முறையில் அமல்படுத்த வேண்டும். சாலை விபத்துகளைத் தடுக்க முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும். காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களை மிகவும் கண்ணியமான முறையில் நடத்த வேண்டும். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். பொதுமக்கள், வணிகர்கள் உட்பட அனைத்துத் தரப்பினருடனும் நல்லுறவைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்.

குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகளை நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சிறையில் அடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய மண்டலத்தில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது உடனடியாக கைது நடவடிக்கை எடுப்பதுடன், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவர்"

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவராக ஆனி விஜயா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "பொதுமக்களுடன் நல்லுறவை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து ஆண் காவலர்களுக்கு உட்கோட்ட அளவில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சியை காவல்துறையினர் நன்கு உள்வாங்கிக் கொண்டால் காவல்துறை - பொதுமக்கள் இடையேயான நல்லுறவு நிச்சயம் சிறப்பாக அமையும்.

ஆனி விஜயா

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பெண்கள், குழந்தைகள் எந்தச் சூழலிலும் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பல்வேறு மேலாண்மைப் பயிற்சிகளை அளிக்கவும், தன்னம்பிக்கை மற்றும் திறன்களை வளர்த்துக் கொள்ள உதவும் வகையிலும் செயலாற்றவுள்ளேன்.

பொதுமக்கள் தங்கள் குறைகள், கோரிக்கைகள், ஆலோசனைகள் தொடர்பாக என்னை 94454 63333 என்ற எண்ணில் எந்த நேரத்திலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்" என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT