சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக தென்மண்டல காவல் துறை ஐஜி எஸ்.முருகன் நேற்று தெரிவித்தார்.
தென்மண்டல ஐஜியாக எஸ்.முருகன் இன்று காலை பொறுப்பேற்றார். தொடர்ந்து அவர் தூத்துக்குடி வந்து சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக திருநெல்வேலி சரக டிஐஜி பிரவின்குமார் அபிநபு, தூத்துக்குடி எஸ்பி எஸ்.ஜெயக்குமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணைக்கு உள்ளூர் போலீஸார் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். சிபிசிஐடி விசாரணையில் நாங்கள் தலையிட முடியாது.
அவர்கள் விசாரணைக்கு ஆஜர்படுத்தக் கோரும் நபர்களை நாங்கள் ஆஜர்படுத்தி வருகிறோம். இதுவரை நான்கு பேரை ஆஜர்படுத்தியுள்ளோம். சாத்தான்குளம் சம்பவத்தில் குற்றம் உண்மை என்றால், அந்த குற்றத்தை நிகழ்த்தியவர்களுக்கு சட்டப்படி என்ன தண்டனையோ அதனை வழங்க வேண்டும். சட்டத்துக்கு முன்னால் அனைவரும் சமம். சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரித்து வருவதால், அது பற்றி நான் எதுவும் கூற இயலாது.
சாத்தான்குளம் சம்பவத்தில் சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதிக்கு, அவர் கோரியதன் அடிப்படையில் சம்பளத்துடன் கூடிய ஒரு மாத விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்து காவலர்களுக்கு தொடர்ந்து பயிற்சிகளை அளித்து வருகிறோம். காவல் நண்பர்கள் குழுவினருக்கு காவல்துறையினருக்கு உள்ள அதிகாரம் கிடையாது. காவல் நண்பர்கள் குழுவினர் விதிகளை மீறி செயல்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
காவல் துறையினருக்கு மன அழுத்ததை போக்க நடவடிக்கை எடுக்கப்படும். காவல் துறை பொதுமக்களின் நண்பர்களை என்பதை தொடர்ந்து கடைபிடிப்போம் என்றார் அவர்.