புதுச்சேரியில் புதிதாக 63 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 800-ஐ கடந்தது.
புதுச்சேரி மாநிலத்தில் இன்று (ஜூலை 2) புதிதாக 63 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 802 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 459 ஆகவும் அதிகரித்துள்ளது. இதவரை 331 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று கூறும்போது, "புதுச்சேரியில் நேற்று 583 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் புதுச்சேரியில் 60 பேர், காரைக்காலில் 3 பேர் என மொத்தமாக 63 பேர் இன்று கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
அவர்களில் 52 பேர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும், 8 பேர் ஜிப்மரிலும், காரைக்காலில் 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 802 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 459 ஆகவும் அதிகரித்துள்ளது.
இவற்றில் புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 250 பேரும், ஜிப்மரில் 110 பேரும், கோவிட் கேர் சென்டரில் 57 பேர், வெளி மாநிலங்களில் புதுச்சேரியைச் சேர்ந்த 4 பேர் காரைக்காலில் 28 பேர், மாஹே 8 பேர், ஏனாமில் 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது கரோனா தொற்றுக்கு ஆளான 63 பேரில் ஆண்கள் 34, பெண்கள் 29 பேர் என உள்ளனர். 18 வயதுக்கு கீழ் 9 பேரும், 18 முதல் 60 வயது வரை 50 பேரும், 50 வயதுக்கு மேல் 4 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபோல் தற்போது 30 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 331 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை மொத்த 18 ஆயிரத்து 92 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 16 ஆயிரத்து 984 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என வந்துள்ளது. 307 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளன. இதுவரை 12 பேர் இறந்துள்ளனர்.
காரைக்காலில் மாங்கனி திருவிழா தொடங்கியுள்ளது. தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்வது இவற்றை மிக, மிக கண்டிப்பாக கடைபிடித்தால் கரோனாவை விரட்டலாம்" எனத் தெரிவித்தார்.