ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தொகுதி அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகரனுக்கு கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது.
மேலும் பிளஸ் டூ படிக்கும் அவரது மகன், 38 வயதுடைய அவரது உதவியாளர் உள்ளிட்ட மூவருக்குm கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது .
இதனையடுத்து எம்எல்ஏ சதன் பிரபாகரன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
சதன்பிரபாகரன் கரோனா கால நிவாரணங்கள் வழங்கும் களப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். ஏற்கெனவே மூன்று முறை அவர் கரோனா பரிசோதனை மேற்கொண்டார். இந்நிலையில் 4-வது முறையாக அவர் பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
தொடர்ந்து பாதிக்கப்படும் சட்டப்பேரவை உறுப்பினர்கள்:
தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு 1 லட்சத்தை எட்டிவரும் நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொற்றால் பாதிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.
முதன்முதலில் தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதைதொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., ஆர்.டி.அரசு, செஞ்சி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., மஸ்தான் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
ஆளும்கட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தொகுதி அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகரனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பி.இ., எம்.பி.ஏ., பி.எல்., பட்டம் பெற்றுள்ள சதன் பிரபாகரன் தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தில் செக்ஷன் கண்ட்ரோலராக பணியாற்றி 2006-ல் கட்சிப்பணிக்காக வேலையைத் துறந்தார். 2007-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வென்று, கூட்டுறவுத்துறை துணைப் பதிவாளர் பணி கிடைத்தும், கட்சிப்பணிக்காக வேலைக்குச் செல்லவில்லை.