கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட ரூ.104.44 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக கிரண் குராலா நியமிக்கப்பட்டார்.
கடந்த நவம்பர் 24-ம் தேதி முதல் கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. ஆட்சியர் அலுவலகம் அமைக்க வீரசோழபுரத்தில் 40 ஏக்கர் 18 சென்ட் இடம் தேர்வு செய்யப்பட்டது. இங்கு ஆட்சியர் அலுவலகம், அரசு அதிகாரிகள் குடியிருப்பு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், விளையாட்டு மைதானம் உள்ளிட்டவை அமைக்க வரைபடம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் பொதுப்பணித்துறை சார்பில் மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கான ஆட்சியர் அலுவலகம் அமைக்க அரசு நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது.
அதனடிப்படையில், கடந்த 27-ம் தேதி வருவாய் நிர்வாகப் பிரிவின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில் வீரசோழபுரம் கிராமத்தில் 40.18 ஏக்கர் பரப்பளவில் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த ஆட்சியர் வளாகம் அமைக்க ரூ.104.44 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு நேற்று (ஜூலை 1) அரசாணை வெளியிடப்பட்டது.