சிதம்பரத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த ரவுடி மோகன்ராம் என்பவர் நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது, திடீரென குண்டு வெடித்தது. இதில் அவர் படுகாயமடைந்தார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியரான பன்னீர்செல்வம் தனது வீட்டை அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர் அருள் என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார்.
திண்டுக்கல்லில் பல்வேறு கொலை மற்றும் குற்ற வழக்கு களில் தேடப்படும் குற்ற வாளி ரவுடி மோகன் ராம், பல்கலைக்கழக ஊழியர் அருளுக்கு அறிமுகமானவர் எனக் கூறப்படுகிறது.
ஒரு வாரத்துக்கு முன் சிதம்பரத் துக்கு தனது கூட்டாளிகளுடன் வந்த மோகன்ராம், அருளைச் சந்தித்து தங்க இடம் கேட்டுள்ளார். இதையடுத்து, அருள், தான் வாடகைக்கு இருக்கும் வீட்டிலேயே அவர்களைத் தங்க வைத்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் சனிக்கிழமை அருள் தங்கியிருந்த குடியிருப்பில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்துள்ளது. இதில் வீட்டின் ஜன்னல் கதவுகள் உடைந்து, சுவரில் விரிசலும் ஏற்பட்டுள்ளது. மேலும் வெடி விபத்தால் தீ விபத்தும் ஏற்பட்டது.
அருகிலிருந்தவர்கள் குண்டு வெடிப்பில் காயம்பட்ட மோகன் ராமை மீட்டு சிதம்பரம் தனியார் மருத்துவமனையில் அனுமதித் தனர். குண்டு வெடித்ததை அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ராஜாராம், சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, விசாரணை நடத்தினார்.
பின்னர், காவல்துறை வெடிகுண்டு நிபுணர்கள் வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு ஏற்கெனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த 3 டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகளை மீட்டு, வெடிக்கச் செய்தனர்.