மருத்துவர்கள், செவிலியர்கள் பயன்படுத்தும் என்-95 முகக்கவசம், ஸ்டெதஸ்கோப் கருவி போன்றவற்றைக் கிருமிநீக்கம் செய்யும் எளிமையான பெட்டியை கோவை அரசு மருத்துவமனை மருத்துவர் வடிவமைத்துள்ளார்.
கரோனா அச்சம் காரணமாக மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் பயன்படுத்தும் பொருட்களை மீண்டும் பயன்படுத்த வேண்டுமெனில் கிருமிநீக்கம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமாக கிருமிநீக்கப் பெட்டிகள் (UV sterilization) விற்பனை செய்யப்படுகின்றன. மருத்துவனைகளில் பயன்படுத்தப்படும் இந்தப் பெட்டிகளின் விலை அதிகம்.
எனவே, குறைந்த செலவில், எளிமையான கிருமிநீக்கப் பெட்டியை கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் சமூக மருத்துவத்துறை மருத்துவர் பி.பன்னீர்செல்வம் வடிவமைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, "குறைந்த செலவில் உருவாக்கி, அதை அதிக நாட்கள் பயன்படுத்தும் வகையில் கிருமிநீக்கப் பெட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், புற ஊதாக்கதிர்களைப் பயன்படுத்தி கிருமிநீக்கம் செய்யப்படுகிறது. இந்தப் பெட்டிக்குள் மருத்துவர்கள், செவிலியர்கள் பயன்படுத்தும் என்-95 முகக்கவசம், ஸ்டெதஸ்கோப், செல்போன், கைக்கடிகாரம், சாவி போன்றவற்றை 5 நிமிடங்கள் முதல் 10 நிமிடங்கள் வரை வைத்துவிட்டால் கிருமிநீக்கம் செய்யப்பட்டுவிடும். பின்னர், அவற்றை மீண்டும் பயன்படுத்தலாம்.
இந்தப் பெட்டியை உருவாக்க ரூ.700 முதல் ரூ.800 வரை மட்டுமே செலவாகும். இதையே தனியார் நிறுவனத்திடம் வாங்கினால் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். கோவை அரசு மருத்துவனையில் உள்ள ஒவ்வொரு பிரிவுக்கும் அளிப்பதற்காக இதேபோன்ற பெட்டிகளைத் தயாரித்து வழங்கத் திட்டமிட்டுள்ளோம்" எனத் தெரிவித்தார்.
இந்த எளிய வடிவமைப்பை அறிந்த மருத்துவமனையின் டீன் பி.காளிதாஸ், மருத்துவர் பன்னீர்செல்வத்துக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.