கோவையில் சீல் வைக்கப்பட்ட கடையைத் திறந்து விற்பனையில் ஈடுபட்டு, கரோனா தொற்றுப் பரவலுக்குக் காரணமான துணிக்கடை உரிமையாளர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவை மாநகராட்சி 56-வது வார்டுக்கு உட்பட்ட மசக்காளிபாளையம் பாலன் நகரில், 3 தளம் கொண்ட கட்டிடத்தில் கணேஷ் ஷா என்பவர் துணிக்கடை நடத்தி வந்தார். இங்கு தனிநபர் இடைவெளி முறையாகப் பின்பற்றப்படவில்லை என்பதால், கடந்த 24-ம் தேதி தெற்கு வட்டாட்சியர் இந்தத் துணிக்கடை கட்டிடத்தில் உள்ள துணிக்கடையைப் பூட்டி சீல் வைத்தனர்.
மறுநாள் சட்ட விரோதமாக இந்த சீலை அகற்றி, மீண்டும் துணி வியாபாரத்தை அதன் உரிமையாளர் கணேஷ் ஷா மேற்கொண்டார். தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று துணிக்கடைக்கு மீண்டும் சீல் வைத்தனர். மேலும், அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு கரோனா தொற்றைக் கண்டறியும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து வரும் 9-ம் தேதி வரை இப்பகுதி தனிமைப்படுத்தப்பட்ட இடம் என மாநகராட்சி நிர்வாகத்தினர் அறிவித்தனர். இந்நிலையில், மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையர் செல்வம் பீளமேடு காவல் நிலையத்தில் இன்று (ஜூலை 1) புகார் அளித்தார்.
அதில், "மேற்கண்ட துணிக்கடை நிர்வாகத்தினர் கடையைத் தடையை மீறி திறந்து விற்பனையில் ஈடுபட்டதால், அப்பகுதியில் கரோனா தொற்றுப் பரவ காரணமாக அமைந்து, அப்பகுதியில் 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக துணிக்கடை உரிமையாளர் கணேஷ் ஷா மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.
அப்புகாரின் பேரில், பீளமேடு காவல் துறையினர் தொற்று நோய் தடுப்புச் சட்டப்பிரிவின் கீழ் கணேஷ் ஷா மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.