கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி ஊழியர் உட்பட ஒரே நாளில் 37 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 500-ஐ தொட்டதால் தளர்வுகள் ரத்து செய்யப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளிநாடு, சென்னை, மற்றும் வெளியூர்களில் இருந்து தினமும் ஏராளமானார் வந்த வண்ணம் உள்ளதால் கரோனா தொற்று நகரம், கிராமங்கள் தோறும் பரவலாக அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களில் 200 பேருக்கு மேல் கரோனா பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்தூர், குளச்சல், சின்னமுட்டம், வள்ளவிளை என மீனவ கிராமங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 25 கிராமங்கள் சீல் வைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
குழித்துறை ஆர்.சி தெருவில் 12 பேருக்கு கரோனா உறுதி செய்யபப்ட்டுள்ளது. ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 37 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் மட்டும் 245 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது குமரியில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 500ஐ தொட்டுள்ளது. 4 பேர் மரணமடைந்துள்ளனர். நாகர்கோவில் மாநகராட்சியில் பணியாளற்றிய ஊழியருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து மாநகராட்சி அலுவலகம், மற்றும் வளாக பகுதிகளில் கிருமி நாசினி வாகனம் மூலம் அடிக்கப்பட்டது.
அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதைப்போல் வடசேரி சந்தையில் வியாபாரிக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அங்குள்ள வியாபாரிகள் அனைவரும் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 5 கடைகள் மூடப்பட்டன.
குமரியில் அதிகரித்து வரும் கரோனா தொற்றால் இன்று முதல் ஊரடங்கு தளர்வை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே உத்தரவு பிறப்பித்தார்.
கடைகள், மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் காலை 6 மணியில் இருந்து மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.
பேருந்துகள் இயங்காததால் சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடின. பணிகளுக்கு செல்லும் மக்கள் அவதியடைந்தனர்.