நெய்வேலி நிலக்கரி நிறுவன நிர்வாகத்தின் அலட்சியப்போக்கு தான் விபத்துகளுக்குக் காரணம் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஜூலை 1) வெளியிட்ட அறிக்கை:
"நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் அனல்மின் நிலையத்தில் உள்ள ஐந்தாவது ஆலையில் கொதிகலன் வெடித்து சிதறிய விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். மேலும் 17 பேர் கடுமையாக காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு காரணத்தை அறிந்துகொள்ள வேண்டும். பராமரிப்பு பணிகள் சரியாக செய்யப்படாத காரணத்தினால்தான் இத்தகைய கோர விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
நீண்ட காலத்திற்கு முன் நிறுவப்பட்ட அனல்மின் நிலையங்களை பராமரிப்பதில் ஏற்பட்ட கவனக்குறைவு குறித்து உரிய விசாரணை மேற்கொண்டால் தான் அப்பாவி தொழிலாளர்களின் இழப்புக்கு என்ன காரணம் என்பதை தெரிந்துகொள்ள முடியும். இத்தகைய உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருவது நெய்வேலி நிலக்கரி நிறுவன நிர்வாகத்தின் அலட்சியப்போக்கு தான் காரணம் என்று குற்றம்சாட்டுகிறேன்.
எனவே, பாயிலர் வெடிப்பு விபத்தில் ஐந்து தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் உரிய இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என நெய்வேலி நிலக்கரி நிறுவன நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறேன்"
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.