தமிழகம்

மதுரை புதிய காவல் ஆணையராக பிரேமானந்த் சின்ஹா நியமனம்: விரைவில் பொறுப்பேற்கிறார்

என்.சன்னாசி

மதுரை நகர் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் சென்னைக்கு கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக பிரேமானந்த் சின்ஹா புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை நகர் காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் கடந்த 2017-ல் பொறுப்பேற்றார். கடந்த இரண்டரை ஆண்டுகளில் மதுரை நகரில் குற்றச் செயல், சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளைத் தடுக்க, தொழில்நுட்ப ரீதியில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

குற்றச்சம்பவங்களைத் தடுக்கும் வகையில் குறிப்பாக நகரிலுள்ள 100 வார்டுகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுத்தார். இதில் 50 சதவீதம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

போலீஸாரின் ரெகுலர் ரோந்து பணிக்கு இடையில் புதிதாக ‘ டெல்டா ’ என்ற சிறப்பு ரோந்து படையை உருவாக்கி, தனது கட்டுப்பாட்டில் வைத்து செயல்படுத்தினார். காவல் நிலைய எல்லையில் நடக்கும் சம்பவங்களை முன்கூட்டியே தடுக்க, நுண்ணறிவு போலீஸார் ஏற்கனவே இருந்தாலும், வார்டுதோறும் குற்றச் செயல் தடுப்பது மட்டுமின்றி, மக்களுக்கு தேவையான பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் வார்டு எஸ்ஐக்கள் நியமித்தார்.

மாணவர்களின் வாழ்கையை சீரழிக்கும் கஞ்சா பழக்கத்தை அடியோடு ஒழிக்க, பள்ளி, கல்லூரிகளில் விழிப் புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்தார். ஆபத்து நேரிடும்போது, தங்களை பாதுகாக்க, கல்லூரி மாணவியர்களுக்கு தற்காப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார்.

மதுரையில் கலாச்சார சீரழிவைத் தடுக்கும் பொருட்டு, மசாஜ் கிளப் என்ற பெயரில் செயல்பட்ட போலி நிறுவனங்களை தனிப்படை மூலம் மூட நடவடிக்கை எடுத்தார்.

போக்குவரத்து போலீஸ் எண்ணிக்கையை குறைத்து, விபத்துக்களை தடுக்க முயற்சி எடுத்தார். கரோனா தடுப்பு பணிகள் மற்றும் தொற்றில் இருந்து காவலர்களை பாதுகாக்கும் முன்எச்சரிக்கை நடவடிக்கையிலும் அவர் சிறப்பாக செயலாற்றினார்.

இது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு, அவர் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றார். இருப்பினும், ஏடிஜிபி அந்தஸ்தில் மதுரை நகர் காவல் ஆணையராகவே நீடித்தார். தமிழக நகராட்சி, மாநகராட்சி தேர்தலுக்கு பிறகு, அவர் வேறு இடத்திற்கு மாற்றப்படலாம் என, எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம், பதவி உயர்வு நடவடிக்கையில் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர் வாதம் சென்னை மாநகர் காவல் தொழில்நுட்ப சேவை பிரிவின் கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக பிரேமானந்த் சின்ஹா மதுரை நகர் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் சென்னை பெருநகர் தெற்கு சட்டம், ஒழுங்கு கூடுதல் ஆணையராக இருந்தார். 2001-ல் ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தார். சென்னை போதைப்பொருள் தடுப்பு, போக்குவரத்து பிரிவு, வடசென்னை இணை ஆணையர் உட்பட பல்வேறு இடங்களில் பணிபுரிந்து, மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளார். விரையில் பொறுப்பேற்க உள்ளார்.

இதற்கிடையில் கடந்த ஓராண்டுக்கு முன், மதுரை சரக டிஐஜி யாக நியமிக்கப்பட்ட ஆனிவிஜயா திருச்சி டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக சென்னை பூக்கடை பஜார் துணை ஆணையராக இருந்த ராஜேந்திரன் பதவி உயர்வு மூலம் மதுரை சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT