தமிழகம்

கடலூர் ஆட்சியராகச் சந்திரசேகர சகாமுரி; வலைதளங்களில் வரவேற்றுக் கொண்டாடும் மாவட்ட மக்கள்!

கரு.முத்து

கடலூர் மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்த வெ.அன்புசெல்வன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றதை அடுத்துப் புதிய ஆட்சியராகச் சந்திரசேகர சகாமுரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நில சீர்திருத்தத் துறை இயக்குநராகப் பணியாற்றிய சந்திரசேகர சகாமுரிக்கு மாவட்டம் முழுவதும் பலத்த வரவேற்பும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

கோபிச்செட்டிப்பாளையம் மற்றும் அரியலூரில் சகாமுரி சார் ஆட்சியராகப் பணிபுரிந்தபோது செய்த செயல்களைப் பட்டியலிட்டு வாட்ஸ் அப் மற்றும் முகநூலில் மிக அதிகமான அளவில் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன. அவற்றைக் கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அமைப்பினரும் பொதுமக்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.

''கோபிச்செட்டிப்பாளையத்தில் சார் ஆட்சியராக சந்திரசேகர சகாமுரி பணிபுரிந்தபோது, அந்தியூர், சத்தி, கோபி, பவானி பகுதிகளில் அரசியல் தலையீடுகளால் கண்டுகொள்ளப்படாமல் இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினார். அரசு மருத்துவமனை மற்றும் பேருந்து நிலையங்களில் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டது, மணல் கடத்தலைத் தடுத்து வாகனங்களைப் பறிமுதல் செய்து அபராதம் விதித்தது என அங்கே பல அதிரடிகளை அரங்கேற்றினார்.

திடீர் திடீரென அரசு அலுவலகங்களில் நுழைந்து அலுவலர்களைச் சோதனை செய்து, தவறு நடப்பதைத் தவிர்த்தார். டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை விலை அதிகம் வைத்து விற்ற ஊழியர்களை உடனுக்குடன் சஸ்பெண்ட் செய்தார். பொதுக் கழிவறைகளைச் சோதனை செய்து குறைகளை நிவர்த்தி செய்தார். மலைப் பாதைகளைச் சரிசெய்து கொடுத்து, அங்கெல்லாம் பள்ளி மற்றும் ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்தினார்.

இரவு நேரங்களில் மாறுவேடத்தில் சென்று அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கள ஆய்வு செய்து, தவறுசெய்யும் ஊழியர்களை இடைநீக்கம் செய்தார் சகாமுரி. உழவர் சந்தைக்கு மாறுவேடத்தில் சென்று அங்கு விவசாயிகளுக்குத் தொந்தரவு தரும் வியாபாரிகள் மற்றும் சமூக விரோதிகளை வெளியேற்றினார்.

ஆதி திராவிட மாணவர் நல விடுதியின் நிலை மற்றும் உணவின் தரம் ஆகியவற்றை அவ்வப்போது பரிசோதனை செய்தார். பவானி விடுதியில் வார்டனுக்கு லஞ்சம் கொடுத்துத் தங்கியிருந்த 42 வெளிநபர்களை வெளியேற்றி, வார்டன் மீது நடவடிக்கை எடுத்தார். பல அரசியல் தலைவர்களின் எதிர்ப்பு இருந்தாலும் அவற்றை மீறி அங்கு செயல்பட்டார் சகாமுரி.

சுதந்திரம் பெற்றது முதல் எந்தவொரு அதிகாரியும் செல்லாத கத்தரிமலை என்ற பகுதிக்குச் சென்று மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கேட்டறிந்து நிவர்த்தி செய்தார். அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் வளைந்து கொடுக்காததால், அங்கிருந்து அரியலூருக்கு மாற்றப்பட்டார். இவரது மாற்றத்தை எதிர்த்து கோபி மக்கள் வீதிக்கு வந்து போராடினார்கள்.

அதேநேரம் அரியலூரிலும் தனது அதிரடிகளைத் தொடர்ந்தார். இரவு பத்தரை மணிக்குமேல் டாஸ்மாக் பார் நடத்தியவரைப் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பத்துக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, ரூ.1.50 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்தார்.

வறட்சியான அரியலூர் மாவட்டத்தில் நீராதாரத்தைப் பெருக்கும் வகையில் ஏரி, குளங்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்டெடுத்தார். அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காகவும் பல நல்ல காரியங்களைச் செய்தார். அரியலூரில் புத்தகக் கண்காட்சியை நடத்தி அதில் அப்துல் கலாமைப் பங்கேற்க வைத்ததிலும் சகாமுரியின் பங்கு அதிகம்.

இப்படி, தான் பொறுப்பேற்கும் இடங்களில் எல்லாம் ஆக்கபூர்வமான செயல்களைச் செய்து வந்த அவர், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் உட்பட பல்வேறு பணிமாறுதலுக்குப் பிறகு தற்போது நில சீர்திருத்தத் துறை இயக்குநராகப் பணிபுரிந்து வந்தார். அவரைக் கடலூர் மாவட்ட ஆட்சியராக நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது''.

இவற்றைப் பகிர்ந்து கொண்டுள்ள ‘கடலூர் சிறகுகள்’ அமைப்பினர் அத்துடன் "கடலூர் மக்கள் என்றும் நன்றி மறவாதவர்கள். மிகச் சிறப்பாக ஆட்சிப் பணியாற்றிய ககன்தீப் சிங்பேடியின் புகைப்படத்தைக் காலண்டரில் போடுமளவிற்கு விசுவாசமானவர்கள். உங்களுக்கும் அவ்விடம் வாய்க்கட்டும்.

கடலூர் மாவட்டத்தின் ஆட்சியராகப் பொறுப்பேற்கவிருக்கும் சந்திரசேகர சகாமுரியின் பணி சிறக்க வரவேற்று வாழ்த்துகிறோம்" என்று தங்களது முகநூல் மற்றும் வாட்ஸ் அப் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர். இப்பதிவுகள் கடலூர் மாவட்ட மக்களிடையே பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

SCROLL FOR NEXT