காரைக்குடி மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (சிக்ரி) குறைந்த செலவில் தானியங்கி கை சுத்திகரிப்பான், முப்பரிமாண முக தடுப்பு, மூன்றடுக்கு முகக்கவசங்களை தயாரித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க முடியாமல் இந்தியா உள்ளிட்ட நாடுகள் தடுமாறி வருகின்றன. இதையடுத்து சமூக இடைவெளி, முககவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துவதே சிறந்த வழி என மருத்துவ வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் காரைக்குடி சிக்ரி நிறுவனம் தானியங்கி கை சுத்திகரிப்பான், முப்பரிமாண முகதடுப்பு, மூன்றடுக்கு முகக்கவசங்களை தயாரித்துள்ளது. தானியங்கி கை சுத்திகரிப்பான் எளிதில் எடுத்து செல்லக் கூடி வகையில் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சுத்திகரிப்பானை கைகளால் இயக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதில் இருந்து தானாகவே 2 முதல் 3 மி.லி. கிருமிநாசினி நமது கைகளில் விழும்படி சென்சார் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கருவி இயங்குவதற்கு யூஎஸ்பி மூலம் சார்ஜர் செய்து கொள்ளலாம். மேலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரிடம் இருந்து சுகாதார ஊழியர்கள் தங்களை பாதுகாத்து கொள்ளவதற்காக முப்பரிமாண முகத்தடுப்பையும் தயாரித்துள்ளது. இந்த முகத்தடுப்பை முகக்கவசத்திற்கு மேல் பொருத்தி கொள்ள வேண்டும்.
இது பாலிமர் அடிப்படையிலான கலவை மூலம் மோல்டிங் செய்யப்பட்டுள்ளது. குறைந்த எடை, வலுவான வடிவமைப்பு, எளிதாக மாற்றக் கூடிய ஓ.எச்.பி தாள்கள், சிறந்த காற்றோட்டம் போன்றவை இதன் சிறப்பம்சம்.
இந்த முகத்தடுப்புக்கு சென்னை மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சான்றளித்துள்ளது.
மேலும் சிக்ரி தயாரித்து மூன்றடுக்கு முகக்கவசத்தின் வெளிப்புற அடுக்கில் உள்ள ஹைட்ரோபோபிக் பூச்சு திரவ ஏரோசல்லை (துகள்கள்) தடுக்கிறது. அதேபோல் உட்புற அடுக்கில் உள்ள பாக்டீரிசைடு நுண்ணுயிரிகளை அழிக்கிறது.
இதன்மூலம் பயனாளிகளுக்கு இரட்டை பாதுகாப்பு கிடைக்கிறது. மேலும் மூன்றாவதாக உள்ள ஹைட்ரோபிலிக் அடுக்கு சூடான காற்று, வியர்வையை உள்வாங்கி நாம் சுவாசிப்பதை எளிதாக்கிறது. இந்த முகக்கவசத்தை 30 முதல் 50 முறை துவைத்து பயன்படுத்தலாம்.
இந்த மூன்று அடுக்கு முகக்கவசம் 0.3 மைக்ரான் அளவில் 95 சதவீதத்திற்கு மேலாகன துகள்கள், நுண்கிருமிகள் ஊடுருவலை தடுக்கும் செயல்திறன் கொண்டது. சந்தையில் கிடைக்கும் முதல் தர முகக்கவசங்களை விட கூடுதல் நுண்கிருமி எதிர்ப்பு பண்புகளுடன் சிறந்த பாதுகாப்பை தருகிறது. மேலும் விபரங்களுக்கு 94895 00237 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.