ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகத்தில் நடிகரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது தொடர்பாக, செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலராக பணியாற்றி வந்தவர் ராஜா(47). கடந்த 22-ம் தேதி பேரூராட்சி அலுவலகத்தில் நடிகர் ஒருவரின் பிறந்தநாள் விழாவை, செயல் அலுவலர் ராஜா தலைமையில் ரசிகர்கள், பேனர் வைத்து கேக் வெட்டி கொண்டாடினர். இது தொடர்பான வீடியோ வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியானது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல், அரசு அலுவலக வளாகத்தில் நடிகரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது குறித்த புகார் மாவட்ட ஆட்சியர் பிரபாகரின் கவனத்துக்குச் சென்றது. இதையடுத்து பேரூராட்சிகள் உதவி இயக்குநர் ஜீஜாபாய் விசாரணை நடத்தி, அரசு அலுவலகத்தில் நடிகரின் பிறந்த நாளைக் கொண்டாடிய செயல் அலுவலர் ராஜாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.