தமிழகம்

கிருஷ்ணகிரி பாரூர் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் பெரிய ஏரியில் இருந்து நாளை முதல் 135 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, பாரூர் பெரிய ஏரியில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்க விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

இதை ஏற்று பாரூர் பெரிய ஏரியின் கிழக்கு, மேற்கு கால்வாய்களில் முதல் போக பாசனத்துக்கு பாரூர் பெரிய ஏரியில் இருந்து நாளை (ஜூலை 2-ம் தேதி) முதல் நவம்பர் 13-ம் தேதிவரை 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 397 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காலிங்கராயன் வாய்க்கால்

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் நிலங்களின் முதல் போக நன்செய் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதை ஏற்று பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு இன்று ஜூலை 1-ம் தேதி முதல் அக்டோபர் 28-ம் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும்.

இதனால் ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டம் ஆகியவற்றில் உள்ள 15 ஆயிரத்து 753 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

SCROLL FOR NEXT