தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியில் பெய்த கனமழையால் பாலாற்றின் துணை நதியான மண்ணாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 
தமிழகம்

தமிழக - ஆந்திர எல்லை பகுதியில் கனமழை: பாலாற்றில் வெள்ளப்பெருக்கால் விவசாயிகள் மகிழ்ச்சி

செய்திப்பிரிவு

தமிழக - ஆந்திர எல்லை பகுதியில் விடிய, விடிய பெய்த கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்குஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்தசில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வாணியம்பாடி, ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. தமிழக - ஆந்திர எல்லைப் பகுதிகளான அலசந்திராபுரம், வெங்கடராஜபுரம், திம்மாம்பேட்டை, நாராயணபுரம், அம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 8 மணிக்கு தொடங்கிய கனமழை விடிய, விடிய கொட்டித் தீர்த்தது. இதனால், மழைநீர் ஆவாரங்குப்பம் பகுதியில் உள்ள பாலாற்றில் கலந்தது.

அதேபோல், ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் ஆம்பூரை ஒட்டியுள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அரங்கல்துருகம் அருகேயுள்ள அருவி, பெரிய ஏரி, மத்தூர் கொள்ளையில் உள்ள நத்திசுனை அருவியில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பாலாற்றின் துணை நதியான மண்ணாற்றிலும் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதைக்கண்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

திருப்பத்தூர் அடுத்த ஜலகம்பாறை அருவி பகுதியில் பெய்த கனமழையால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

SCROLL FOR NEXT