ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கரோனா பாதித்த 3 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று வரை கரோனாவால் 803 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 210 பேர் குணமடைந்துள்ளனர், 585 பேர் சிகிச்சையில் உள்ளனர், 8 பேர் இறந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த 78 வயது மூதாட்டி, ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 47 வயது ஆண் ஒருவர், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமநாதபுரம் வெளிப்பட்டணம் செட்டியர்தெருவைச் சேர்ந்த 68 வயதுடைய தொழிலதிபர் ஆகிய 3 பேர் இன்று காலை உயிரிழந்தனர்.
மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். இதுவரை மாவட்டத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று இரவு மாவட்டத்தில் கரோனா பரிசோதனைக்கு உட்பட்டவர்களில் 63 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் பணிபுரிந்து வந்த 3 செவிலியர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு மாற்றாக வேறு செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மருத்துவத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.