சரவணா ஸ்டோர்ஸ் தொழில் நிறுவனங்களின் நிறுவனர் யோகரத்தினம் நேற்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 76. அவரது உடலுக்கு மு.க.ஸ்டாலின், தமிழிசை சவுந்தரராஜன் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பிரபல வணிக நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களின் நிறுவனர் யோகரத்தினம். ஒரு மாதம் முன்பு இவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டவர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 76.
கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில் நேற்று மாலை 4 மணி அளவில் யோகரத்தினம் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், அதிமுக எம்எல்ஏ கலைராஜன், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சமக தலைவர் சரத்குமார் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் பணிக்கநாடார் குடியிருப்பு என்ற குக்கிராமத்தில் சண்முகசுந்தரம் - தங்கப்பழம் தம்பதியின் மூத்த புதல்வராகப் பிறந்தவர் யோகரத்தினம். உடன் பிறந்தவர்கள் 3 பேர். அதில் செல்வரத்தினம், நவரத்தினம் ஏற்கெனவே இறந்துவிட்டனர். மற்றொரு சகோதரர் ராஜரத்தினம் சென்னையில் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். சகோதரர்கள் அனைவருக்கும் தொழில் வழிகாட்டியாக திகழ்ந்தவர் யோகரத்தினம். நேற்று மாலை யோகரத்தினத்தின் இறுதிச் சடங்குகள் நடந்தேறின.