ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் கவிழ்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியின் கீழ் ரூ.6 லட்சத்துக்கான காசோலைகளை அமைச்சர் எஸ்.அப்துல்ரகீம் இன்று வழங்கினார்.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் ஆற்றில் தொம்பச்சிக்கல் என்ற இடத்தில் சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பயணம் செய்த பரிசல் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பரிசலில் பயணித்த கிருஷ்ணமூர்த்தி, கவுரி, ரஞ்சித், கோகிலா, இரண்டரை வயது குழந்தை தர்ஷன், 10 மாதக் குழந்தை சுதிப்தா ஆகியோர் நீரில் மூழ்கினர்.
இந்த சம்பவத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா, உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் என அவர்களது குடும்பத்துக்கு வழங்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, இன்று சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடல்களுக்கு அரசின் சார்பில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.அப்துல்ரகீம் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் முதல்வர் பொது நிவாரண நிதியின் கீழ் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரிடம் ரூ.6 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார். சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி, வட்டாட்சியர்கள் ராமன், இளவரசன், பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.