உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் குறித்த விசாரணையை சிபிசிஐடி போலீஸார் தொடங்கினர்.
சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணையை தொடங்க காலதாமதம் ஆகும் என்பதால், சிபிஐ விசாரணையை தொடங்கும் வரை இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க வேண்டும்.
திருநெல்வேலி சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் அணில்குமார் இன்றைய தினமே விசாரணை தொடங்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
இதையடுத்து சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் அணில்குமார், இன்று மாலை திருநெல்வேலி சரக டிஐஜி பிரவின்குமார் அபிநபுவை சந்தித்தார். அப்போது இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை டிஐஜி அவரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு வந்த டிஎஸ்பி அணில்குமார் விசாரணையை உடனடியாக தொடங்கினார்.