தமிழகம்

ஊரடங்கை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல் நிலையம் அழைத்துச் செல்வது ஏன்?- மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 

செய்திப்பிரிவு

ஊரடங்கை மீறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்வது ஏன் என நான்கு வாரங்களில் அறிக்கை அளிக்க சென்னை காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னையில் கடந்த 19-ம் தேதி முதல் தளர்வு இல்லா முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கை அமல்படுத்திய அன்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தனது பேட்டியில், ''ஊரடங்கைக் கடைப்பிடிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். போலீஸார் பொதுமக்களைத் தாக்குவதோ, தண்டனை தருவதோ கூடாது. ஊரடங்கை மீறினால் நடவடிக்கை மட்டும் எடுக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் கடந்த 19-ம் தேதி காலை சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த சதாம் உசேன் என்பவர் மருந்து வாங்க தனது வாகனத்தில் சென்றார். அண்ணாநகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் கண்ணன், அவருக்கு அனுமதி மறுத்துள்ளார்.

மருந்து வாங்க அனுமதி இருக்கும்போது அனுமதி மறுப்பது ஏன் என சதாம் உசேன் கேட்க, இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, காவல்துறையினரை வரவழைத்தார் கண்ணன். அங்கு வந்த போலீஸார் சதாம் உசேனைத் தரதரவென இழுத்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

போலீஸார் சதாம் உசேனைத் தாக்குவதையும், 10-க்கும் மேற்பட்ட போலீஸார் இழுத்துச் செல்வதையும் பொதுமக்கள் சிலர் கேள்வி எழுப்பினர். சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். ஏற்கெனவே சாத்தான்குளம் பிரச்சினை இருந்துவந்த நிலையில் இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இது சம்பந்தமாக பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. மாநில மனித உரிமை ஆணையப் பொறுப்புத் தலைவர் துரை ஜெயச்சந்திரன், இது தொடர்பாக நான்கு வாரங்களில் விளக்கம் அளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இரண்டு கேள்விகளையும் அவர் எழுப்பியுள்ளார்.

* ஊரடங்கை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வது ஏன்?

* இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக காவல் துறையினருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கவும், காவல் ஆணையருக்கு துரை ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT