தமிழகம்

சாத்தான்குளம் காவல் நிலையத்தை வருவாய் நிர்வாகத்திடம் ஒப்படைக்க உத்தரவு; 159 ஆண்டு இந்திய காவல்துறை வரலாற்றில் அவமான நிகழ்வு: ஓய்வுபெற்ற டிஜிபி விமர்சனம் 

செய்திப்பிரிவு

சாத்தான்குளம் காவல் நிலையத்தை வருவாய் நிர்வாகத்துறையிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிடும் அளவுக்குச் சென்றது இந்திய காவல்துறைச் சட்டம் அறிமுகமான 159 ஆண்டுகால வரலாற்றில் அவமான நிகழ்வு என ஓய்வுபெற்ற கேரள முன்னாள் டிஜிபி என்.சி.ஆஸ்தானா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தூத்துக்குடி சாத்தான்குளத்தில் பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததால் வந்த விவகாரத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் காயங்களுடன் கோவில்பட்டி கிளைச்சிறையில் அனுமதிக்கப்பட்டதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டதில் இருவரும் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த இருவர் மரணத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டித்தன. தூத்துக்குடி மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய அனைவரும் கோரிக்கை வைத்தனர். உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்கைக் கையில் எடுத்து விசாரித்து வருகிறது.

மாநில மனித உரிமை ஆணையமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வழக்கு விசாரணைக்குச் சென்ற குற்றவியல் நடுவர் பாரதிதாசனை மிரட்டியதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து எஸ்.பி. பாலகோபாலன், ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

மாஜிஸ்திரேட் விசாரணைக்கு போலீஸ் ஒத்துழைப்பு தரவில்லை என்ற புகாரில் நடவடிக்கை எடுக்க மதுரை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. சாத்தான்குளம் காவல் நிலையத்தை வருவாய்த்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக வட்டாட்சியர் செந்தூர்ராஜன் நியமிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வு காவல்துறையில் பெரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. அகில இந்திய அளவில் இந்த வழக்கு போகும் தன்மையை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் அதனால் பலரும் இதன் மீது கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து கேரள முன்னாள் டிஜிபி என்.சி.ஆஸ்தானா தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். 1986-ம் ஆண்டு கேரள பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான அவர் சிஆர்பிஎப் ஏடிஜிபி மற்றும் கேரள டிஜிபியாகப் பதவி வகித்துள்ளார். 2019-ம் ஆண்டு இவர் ஓய்வுபெற்றார்.

ஆஸ்தானா நியூக்ளியர் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வு 1861 காவல்துறைச் சட்டம் அகில இந்திய அளவில் அறிமுகப்படுத்தப்பட்டதில் முதல் நிகழ்வு.

மூத்த அதிகாரிகள் மீது நம்பிக்கை இல்லாமல் போடப்பட்ட நிகழ்வு அவமானகரமான ஒன்று”.


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மூத்த காவல்துறை அதிகாரியின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT