கோவை மாவட்டத்தில் கரோனா நோய்ப் பரவல் அதிகரித்து, தினமும் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்படும் நிலையில், கூடுதல் மருத்துவமனை அமைக்க வேண்டுமென்று சட்டப்பேரவை திமுக உறுப்பினர் நா.கார்த்திக் வலியுறுத்தியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் நேற்று (ஜூன் 29) மட்டுமே புதிதாக 65 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் இதுவரை 528 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கோவை மாநகர திமுக மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ கூறியதாவது:
"தற்போதுள்ள சூழலில் தினமும் 5,000 பேருக்குக் கரோனா தொற்றுப் பரிசோதனை மேற்கொண்டால்தான், நோய்ப் பரவல் நிலவரத்தைக் கண்டறிந்து, நோயாளியை உடனடியாக மீட்க முடியும்.
கோவை வரதராஜபுரத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 500-ஐக் கடந்துவிட்டது. இஎஸ்ஐ மருத்துவமனையில் சுமார் 500 படுக்கை வசதிகள் இருப்பதாக சுகாதாரத் துறையினர் கூறுகின்றனர். இந்த மருத்துவமனை ஒரு வாரத்துக்குள் நோயாளிகளால் நிரம்பிவிடும் வாய்ப்புள்ளது.
கூடுதல் எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற வந்தால், அவர்களை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருக்கும். அங்கும் குறைவான படுக்கை வசதிகள் மட்டுமே இருக்கின்றன. மேலும், வேறு நோயாளிகளுடன் கரோனா நோய் பாதித்தவர்களை அனுமதிப்பது, பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, கரோனா நோய்க்காக வேறு ஏதாவது மருத்துவமனையில் தனி வார்டு அமைத்து, சிகிச்சை வசதியை மேம்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
தற்போது தனியார் மருத்துவமனையில் கரோனா நோயாளிகளைச் சிகிச்சைக்காக அனுமதித்தாலும், வசதி குறைவான ஏழை மக்கள், அதிக தொகை செலுத்தி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாத சூழல் இருக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் தமிழக அரசின் பொது மருத்துவக் காப்பீடு அட்டையைப் பயன்படுத்தி சிகிச்சை பெற அனுமதி வழங்கப்படுவதில்லை.
எனவே, கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை தர கோவை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சிறப்பு வார்டு தயார் செய்யலாம். தனியார் மருத்துவமனைகளில் உள்ள வென்டிலேட்டர்களைக் கேட்டுப் பெறலாம். நோய் அறிகுறியுடன் வருபவர்களைத் தனிமைப்படுத்துவதற்கு ஊருக்கு ஒதுக்குப்புறமான, மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் உள்ள அடுக்குமாடிகள் அல்லது கல்லூரி கட்டிடங்களைப் பயன்படுத்தலாம்.
வரதராஜபுரம் இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் தினமும் கிருமிநாசினி தெளித்து, அப்பகுதி மக்கள் அச்சமின்றி வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்".
இவ்வாறு நா.கார்த்திக் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.