நாமக்கல் மாவட்டம் பிலிக்கல்பாளையம் வெல்ல ஏல மண்டிகள் மறு உத்தரவு வரும் வரை நடத்தக்கூடாது என, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கா. மெகராஜ் இன்று (ஜூன் 30) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
"பரமத்தி வேலூர் அருகே பிலிக்கல்பாளையத்தில் அதிகளவில் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கு உற்பத்தி செய்யப்படும் வெல்லம் பிலிக்கல்பாளையம் ஏலமண்டி சந்தையில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை கொள்முதல் செய்ய வெளிமாவட்டங்களில் இருந்து அதிகளவில் வியாபாரிகள் வந்து செல்கின்றனர்.
கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வாரந்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் செயல்படும் வெல்லம் மற்றும் நாட்டுச்சர்க்கரை ஏலமண்டிகளை மறு உத்தரவு வரும் வரை நடத்தக்கூடாது. மீறினால் அரசு விதிமுறைகளின்படி தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.