நீதிபதியை அவதூறாகப் பேசிய போலீஸாரைக் கண்டித்து கோவில்பட்டியில் வழக்கறிஞர்கள் சார்பில் போராட்டம் நடந்தது.
சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்குச் சென்ற கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்ற நடுவர் பாரதிதாசனை அவதூறாகப் பேசி, மிரட்டல் விடுத்த காவலர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.
தந்தை, மகனை படுகொலை செய்த காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவில்பட்டி சார்பு நீதிமன்றம் அருகே வழக்கறிஞர்கள் திரண்டனர்.
அங்கிருந்து ஊர்வலமாக அவர்கள் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு வந்து, வழக்கறிஞர் விஜயபாஸ்கர் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.
போராட்டத்தில், வழக்கறிஞர் கருப்பசாமி, கோபி, முத்துகுமார், நீதிபாண்டியன், ராமச்சந்திரன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். பின்னர் எட்டயபுரம் சாலை வழியாக ஊர்வலமாக வந்து சார்பு நீதிமன்றம் அருகே போராட்டத்தை முடித்தனர்.