தமிழகத்தில் பருத்தி பயிரிட்டுள்ள விவசாயிகள் அதை விற்க முடியாமல் தவித்து வருகின்றனர். ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பல நாட்களுக்குக் காத்திருந்து விற்பனை செய்கிறார்கள். அங்கும் மிகக் குறைந்த விலைக்குத்தான் விவசாயிகளிடம் கொள்முதல் செய்கிறார்கள். இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். இதையடுத்து, பருத்தி கொள்முதலில் அரசு உரிய அக்கறை காட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
''காவிரி டெல்டா மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பெருமளவு பருத்தி சாகுபடி செய்து தற்போது அறுவடை நடந்து வரும் நிலையில் அவற்றை வேளாண் ஒழுங்குமுறை விற்பனை நிலையங்களில் குவித்து வைத்து விவசாயிகள் மாதக்கணக்கில் காத்திருக்கின்றனர். வியாபாரிகளுடன் கொள்முதல் நிலைய அதிகாரிகளும் கூட்டுச் சேர்ந்து, அரசு நிர்ணயம் செய்துள்ள 100 கிலோ பஞ்சுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ. 5,250-ஐக்கூட வழங்க மறுக்கிறார்கள்.
அவர்கள் வெறும் ரூ.3,000 முதல் 3,500 வரை மட்டுமே வழங்கி விவசாயிகள் வயிற்றில் அடிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சு கொள்முதல் நிலையங்களில் வெளிப்படைத் தன்மையுடன் விலை நிர்ணயம் செய்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டெல்டாவில் குறுவை சாகுபடிக்கு சுமார் 2 லட்சம் ஏக்கரில் நெல் நடவு செய்ய நாற்று விடப்பட்டுள்ளது. 1.50 லட்சம் ஏக்கரில் நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான தண்ணீரை மேட்டூரிலிருந்து விடுவிக்க வேண்டும். அணையிலிருந்து திறக்கப்படும் 10 ஆயிரம் கன அடியை 18 ஆயிரம் கன அடியாக உயர்த்த வேண்டும்.
தமிழகம் முழுவதும் பொதுமுடக்கத்தால் வேலைவாய்ப்பை இழந்து, வருவாய் இன்றி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆங்காங்கே கந்துவட்டிக் கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. இதைத் தடுத்த நிறுத்த, மாவட்ட அளவில் சிறப்பு கண்காணிப்புக் குழுக்களை ஏற்படுத்திட முதல்வர் முன் வர வேண்டும்.
டெல்லியில் பத்துக்கும் மேற்பட்ட மிகப் பெரும் மருத்துவமனைகள் இருக்கும்போது கரோனா சிகிச்சைக்கு 10 ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட பிரம்மாண்டமான மருத்துவமனையை மத்திய அரசு ஏற்படுத்தி வருவதாகத் தெரிகிறது. டெல்லிக்கு இணையாகப் பாதிக்கப்படும் தமிழகத்திலும் அதே போன்றதொரு மருத்துவமனையை அரசு ஏற்படுத்த வேண்டும்''.
இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.