தமிழகம்

செங்கை, காஞ்சி மாவட்ட 17 பேரூராட்சிகளில் கரோனா சிறப்பு மருத்துவ முகாம்

செய்திப்பிரிவு

கரோனா தடுப்பு நடவடிக்கையாக காஞ்சி, செங்கை மாவட்டத்தில் உள்ள 17 பேரூராட்சிகளில் பொதுமக்களுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கியது. இந்த முகாம் ஒருவாரம் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஞ்சி, செங்கை மாவட்டத்தில் 17 பேரூராட்சிகள் உள்ளன. நேற்று வரை 900 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 25 பேர் இறந்துள்ளனர்.மேலும் பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம், சிட்லபாக்கம், மாங்காடு, குன்றத்தூர் போன்ற பேரூராட்சிகளில் கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிகம் பாதிக்கப்பட்ட பேரூராட்சிகளில் நேற்று கரோனா சிறப்பு மருத்துவ நடைபெற்றது. முகாமினை தமிழக பேரூராட்சிகளின் இணை இயக்குநர் மலையமான் திருமுடிக்காரி தொடங்கிவைத்தார். இதில் காஞ்சி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மனோகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


பின்னர் செய்தியாளர்களிடம் இணை இயக்குநர் மலையமான் திருமுடிக்காரி கூறியதாவது:

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், 17 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில், கரோனா
நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தடுக்க ஒவ்வொரு பேரூராட்சிக்கும், 30 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள், வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு, காய்ச்சல், நாடித்துடிப்பு, இதய துடிப்பு, ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு, நீரிழிவு நோய் இருதய நோய், கேன்சர் உள்ளதா என, சோதனை செய்வார்கள். இதில் உடல்நலக் குறைபாடுகள் இருந்தால், அது குறித்து டாக்டர்களுக்கு தெரிவிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 90 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, இரண்டு மாவட்டங்களிலும் சேர்த்து பாதிப்பு அதிகமுள்ள பேரூராட்சிகளில் ஒரு வாரத்திற்கு, சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளது. இதன் மூகம் அறிகுறி இன்றி வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுக்கு, சிகிச்சை அளிக்கப்படும்.

சம்பந்தப்பட்ட பேரூராட்சிகளில் வசிக்கும் மக்கள் இந்த, மருத்துவ முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் முகாமில் சோதனைக்கு வரும் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மல்டி வைட்டமின் மற்றும் ஜிங்க் மாத்திரைகள், கபசுர குடிநீரும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT