கோவையில் நேற்று பாஜக பூத் கமிட்டிகளை மேலாண்மை செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய செயலியை அறிமுகம் செய்துவைத்த மாநிலத் தலைவர் எல்.முருகன். அருகில், மாநிலப் பொதுச் செயலர் வானதி சீனிவாசன், தொழில்நுட்பப் பிரிவு செயலர் கவிதா ராஜன் உள்ளிட்டோர். படம்: ஜெ.மனோகரன் 
தமிழகம்

சாத்தான்குளம் விவகாரத்தை அரசியலாக்கும் எதிர்க்கட்சிகள்: பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சாத்தான்குளம் விவகாரத்தை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவதாக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறினார்.

கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

மத்திய அரசின் சாதனைகளை, சமூக இடைவெளியுடன் வீடு வீடாகச் சென்று மக்களிடம் எடுத்துக் கூறிவருகிறோம். ராமர் கோயில் பிரச்சினை, காஷ்மீரில் 370-வது சட்டப் பிரிவு நீக்கம் என பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சினைகள், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் தீர்க்கப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் காரணமாக மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தேசம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக ரூ.1.75 லட்சம் கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல்

தமிழகத்தில் பாஜக சார்பில் ஒரு கோடி பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதுடன், 30 லட்சம் பேருக்கு `மோடி கிச்சன்’ மளிகைப் பொருட்கள் தொகுப்பு, 45 லட்சம் முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் `சுய சார்பு பாரதம்’ திட்டத்தால் லட்சக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையில், கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு மட்டும் 10 சதவீதம் கிடைத்துள்ளது.

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

அரசு அறிவிப்புக்கு வரவேற்பு

சாத்தான்குளத்தில் வியாபாரி கள் இருவர் உயிரிழந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.

அதேசமயம், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்தை அரசியலாக்குகின்றன. காவல் துறையினர் சிலர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த காவல் துறையையும் குற்றம்சாட்டுவது சரியல்ல. இவ்வாறு எல்.முருகன் கூறினார்.

கோவை மாநகர் மாவட்ட பாஜக சார்பில், பூத் கமிட்டிகளை மேலாண்மை செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள கணினி மற்றும் செல்போன் செயலியை மாநிலத் தலைவர் முருகன் அறிமுகம் செய்துவைத்தார்.

மாநிலப் பொதுச் செயலர் வானதி சீனிவாசன், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், சிறுபான்மை அணி துணைத் தலைவர் ஜே.ஜான்சன், மாவட்டத் தலைவர் நந்தகுமார், தொழில்நுட்பப் பிரிவு செயலர் கவிதா ராஜன், செய்தி தொடர்பாளர் சபரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT