கடந்த 4 நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதி திமுக எம்எல்ஏ கே.எஸ்.மஸ்தானுக்கு நேற்று முன்தினம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, உடன் சென்ற அவரது மனைவி, மகனுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நேற்று முடிவு வெளியானதில் இருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இருவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே செஞ்சியில் உள்ள கே.எஸ்.மஸ்தானின் வீடு உள்ள பகுதி, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எம்எல்ஏவுடன் தொடர்பில் இருந்த திமுக ஒன்றிய செயலாளர்கள் 3 பேர், மஸ்தான் குடும்பத்தினர், கார் ஓட்டுநர், வீட்டுப் பணியாளர்கள் உட்பட 25 பேருக்கு நேற்று கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.