பேரணாம்பட்டு அருகே அதிகாலையில் குடிசை வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவி உயிரிழந்தார்.
பேரணாம்பட்டு வட்டம் பொகளூர் அருகேயுள்ள கிடங்கு ராமாபுரம் கிராமத்தில் நேற்று அதிகாலை கனமழை பெய்தது. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவரின் மண் குடிசை சுவர் அதிகாலை 4.30 மணியளவில் இடிந்து விழுந்தது. இதில், தேவராஜின் பேத்தி பவித்ரா(14) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தேவராஜ், அவரது மனைவி லட்சுமி ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு வேலூர்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பவித்ராவின் பெற்றோர் பெங்களூருவில் கூலிவேலை செய்து வருகின்றனர்.
பவித்ரா பல்லலகுப்பம் கிராமத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த விபத்து தொடர்பாக மேல்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.