வேலூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தில்கீழ் ஆலத்தூர் ஏரியில் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம். 
தமிழகம்

வேலூர் மாவட்ட குடிமராமத்து திட்டத்தில் ரூ.4.69 கோடி செலவில் 14 ஏரிகள் தூர்வாரும் பணி: ஆட்சியர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் 2020-21நிதியாண்டில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் ரூ.4.69 கோடியில் 14 ஏரிகள் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை நீர்வள ஆதாரத் துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 101 ஏரிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. குடிமராமத்து திட்டத்தின்கீழ் இம்மாவட்டத்தில் உள்ள 42 ஏரிகள் இதுவரை ரூ.8.14 கோடி மதிப்பில் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 3,486.56 ஹெக்டேர் விவசாயநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இதற்கிடையில், 2020-21-ம் நிதியாண்டில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் ரூ.4.69 கோடியில் 14 ஏரிகளை தூர்வாரும் பணி தொடங்கியுள்ளது. இந்தப் பணிகளின் மூலமாக 17.08 கி.மீ. கரைகள் பலப்படுத்தப்படுவதுடன், 110.09 கி.மீ. கால்வாய்கள் தூர்வாரப்படும். மேலும், 26 மதகுகள் பழுதுபார்ப்பு, 2 மதகுகள் மறுகட்டுமானம் செய்யப்படும். ஒட்டுமொத்தமாக இத்திட்டத்தின் மூலமாக 1,272.83 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கே.வி.குப்பம் வட்டத்தில் உள்ள கீழ்ஆலத்தூர் ஏரியில் ரூ.35.70 லட்சம் மதிப்பிலான குடிமராமத்துப் பணிக்கானபூமி பூஜை நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தூர்வாரும்பணியை தொடங்கி வைத்தார்.

SCROLL FOR NEXT