சாத்தான்குளம் வணிகர்கள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் போலீஸாரால் தாக்கப்பட்டதில் மரணமடைந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கையை ஏற்று சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில் அதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி சாத்தான்குளத்தில் பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததால் வந்த விவகாரத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் காயங்களுடன் கோவில்பட்டி கிளைச்சிறையில் அனுமதிக்கப்பட்டதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டதில் இருவரும் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த இருவர் மரணத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டித்தன. தூத்துக்குடி மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய அனைவரும் கோரிக்கை வைத்தனர். உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்கைக் கையில் எடுத்து விசாரித்து வருகிறது.
மாநில மனித உரிமை ஆணையமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அகில இந்திய அளவில் ராகுல் காந்தி முதல் சினிமா, கிரிக்கெட் பிரபலங்கள் இவ்விவகாரத்தில் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தனர். சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய கோரிக்கை வலுத்துவந்தது.
இந்நிலையில் சேலத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என அறிவித்தார். இன்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் அரசுத் தரப்பில் அதுகுறித்து அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது அரசு சிபிஐ விசாரணைக்கு மாற்றும் அரசாணையை வெளியிட்டுள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் மரண வழக்கை உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் சிபிஐ விசாரணைக்கு மாற்றும் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
“ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் கடையை மூடும் விவகாரத்தில் போலீஸாருடன் தகராறு செய்து அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்த குற்றத்தின் கீழும், பேரிடர் மேலாண் சட்டம் மற்றும் ஊரடங்கை மீறிய சட்டத்தின் கீழ் 19/6 அன்று கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு பின்னர் 20/6 மதியம் 2-30 மணி அளவில் கோவில்பட்டி சப் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
அங்கிருந்து மருத்துவ சிகிச்சைக்காக இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 22-ம் தேதி இரவு 9 மணிக்கு பென்னிக்ஸ் மரணமடைந்தார் என அன்றிரவு ஜெயில் சூப்பிரண்ட் சங்கர் கோவில்பட்டி கிழக்கு ஸ்டேஷனில் புகார் அளித்ததன் பேரில் பிரிவு 176(1-எ)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
23/6 காலை 5.40 க்கு தந்தை ஜெயராஜும் உயிரிழக்க மீண்டும் சிறை கண்காணிப்பாளர் புகாரின் பேரில் அதன் மீதும் 176 (1-எ) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இரண்டு வழக்குகளின் விசாரணையை நேர்மையான முறையில் நடக்க சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என டிஜிபி பரிந்துரை செய்தார்.
அதேபோன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையும் இதை அரசின் கொள்கை முடிவு என அங்கீகரித்தது. இந்நிலையில் இந்த வழக்கு குறித்து டிஜிபியின் பரிந்துரையைக் கவனமாக ஆராய்ந்த அரசு கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரண வழக்குகளை டெல்லி சிறப்பு போலீஸ் சட்டத்தின் கீழ் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடுகிறது”.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.