தமிழகம்

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான புதிய சிசிடிவி காட்சி: போலீஸ் முதல் தகவல் அறிக்கைக்கு மாறான காட்சிகள் பதிவு

ரெ.ஜாய்சன்

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மர்ம மரணம் சம்பவம் தொடர்பாக புதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதில் போலீஸார் முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்த தகவல்களுக்கு மாறான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது காவல் துறையினருக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கடந்த 19-ம் தேதி இரவு கைது செய்தது தொடர்பாக போலீஸார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில், அவர்கள் கடையை இரவு 9 மணிக்கு மேல் நிர்ணயித்த நேரத்தை தாண்டி திறந்து வைத்திருந்ததாக கூறியிருந்தனர். மேலும், அவர்களை கைது செய்த போது தரையில் உருண்டு போராட்டம் நடத்தியதாகவும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஜெயராஜ் கடைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் இன்று வெளியாயின. இதில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரது கடைகள் மட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள மற்றக் கடைகளும் திறந்திருந்தன.

மேலும், அவர்கள் இருவரும் போலீஸார் கைது செய்தபோது எந்தப் போராட்டமும் நடத்தவில்லை, போலீஸாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபடவில்லை.

ஜெயராஜ் போலீஸ் வாகனத்திலும், பென்னிக்ஸ் நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளிலும் ஏறி காவல் நிலையம் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

மேலும், இருவரும் நல்ல நிலையில் இயல்பாக நடந்தே செல்கின்றனர். இதன் மூலம் இருவரும் அன்று இரவு காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்ட பிறகே காயமடைந்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்த வீடியோ காட்சி சாத்தான்குளம் போலீஸாருக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT