மேட்டூர் அணை நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதால், குறுவை போல, சம்பா சாகுபடியும் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர் டெல்டா விவசாயிகள். டெல்லியில் வரும் 28-ம் தேதி நடக்கவுள்ள காவிரி கண்காணிப்புக் குழு கூட்டம், விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால் இந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. ஆகஸ்ட் 9-ம் தேதிதான் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. எனினும் கர்நாடகத்தில் இருந்து போதிய அளவில் நீர்வரத்து இல்லாததால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேக மாகக் குறைந்து வருகிறது. 120 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 68 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இதுவும் அதிகபட் சம் 3 வாரங்களுக்கு மட்டுமே வரும்.
இதனால் சம்பா சாகுபடியும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள் ளது. இதனால், டெல்டா விவசாயி கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதற்கிடையே, காவிரி நடுவர்மன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடகம் உடனே திறந்துவிட வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. கர்நாடகத்தில் எதிர்பார்த்த அளவு பருவமழை பெய்யாததால் தண்ணீர் திறக்க இயலாது என்று கர்நாடக அரசு கூறிவருகிறது.
கர்நாடகம் கூறுவது சரியல்ல
இது உண்மையில்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது. ‘‘கர்நாடகத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவகாலத்தில் வழக்கமாக பெய்யும் அளவுக்கே இந்த ஆண்டும் மழை பெய்துள்ளதாக இந்திய வானியல் ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. எனவே, பருவமழை குறைந்ததாக கர்நாடகம் கூறுவது சரியல்ல’’ என்று தமிழக தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில், மத்திய நீர்வளத் துறை செயலாளர் தலைமையில் காவிரி கண்காணிப்புக் குழு கூட்டம் வரும் 28-ம் தேதி டெல்லியில் நடக்க உள்ளது. இதில் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி மாநில தலைமைச் செயலாளர்கள் பங்கேற்கின்றனர். இக்கூட்டம் தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விளைபொருட்கள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்புச் சங்கத்தின் பொதுச் செயலாளர் மன்னார்குடி எஸ்.ரங்கநாதன் கூறியதாவது:
45 சதவீத நீர் தரவேண்டும்
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இயல்பான மழைப்பொழிவு இருக்கும் ஆண்டுகளில் கர்நாடகத்துக்கு 425 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். அதில் இருந்து தமிழகத்துக்கு 192 டிஎம்சி, அதாவது, மொத்த நீர்இருப்பில் சுமார் 45 சதவீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பதுதான் காவிரி நடுவர்மன்றத்தின் இறுதி தீர்ப்பு.
போதிய மழை இல்லை எனக் கூறி கர்நாடகம் தண்ணீர் தர மறுப்பது சரியல்ல. இந்த ஆண்டில் கர்நாடக அணைகளுக்கு மொத்தம் எவ்வளவு தண்ணீர் கிடைத்தது என்பதைக் கணக்கிட்டு, அதில் 45 சதவீத அளவு நீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும். இந்த நியாயமான நீர் பங்கீடு தமிழக விவசாயிகளுக்கு கிடைப்பதை டெல்லியில் கூடும் காவிரி கண்காணிப்புக் குழு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு ரங்கநாதன் கூறி னார்.
கபினி நீரை திறக்கவேண்டும்
தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூறும்போது, ‘‘கபினி அணை நீர் கர்நாடக பாசனத்துக்குப் பயன்படாது. அந்த நீரை உடனே தமிழகத்துக்கு திறக்க வேண்டும். கண்காணிப்புக் குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்’’ என்றார்.
அக்டோபர் 3-வது வாரத் தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால் மேட்டூர் அணை நீர்இருப்பு அதுவரை போதாது. தமிழகத்தில் சம்பா பயிரை காப்பாற்ற வேண்டுமானால், கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவது அவசியம். இதை உணர்ந்து காவிரி கண்காணிப்புக் குழு உரிய முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்புடன் டெல்டா விவசாயிகள் காத்திருக்கின் றனர்.