தமிழகம்

திரைப்படப் பாணி: 100 நாட்களும் தவறாமல் பணிசெய்த தூய்மைப் பணியாளருக்கு விருது

கரு.முத்து

கரோனாவால் ஊர் அடங்கி நூறு நாட்கள் ஆக உள்ள நிலையில் தொடர்ந்து நூறு நாட்களாகப் பணிக்கு வந்த தூய்மைப் பணியாளரைப் பாராட்டி விருது கொடுத்து கவுரவித்திருக்கிறார் திரைப்பட இயக்குநர் ஒருவர்.

தமிழ்நாட்டில் முதல் ஊரடங்கு மார்ச் 25-ம் தேதியன்று தொடங்கியது. அதன் அடிப்படையில் ஓரிரு நாட்களில் நூறு நாட்கள் நிறைவடையப் போகின்றன. பொதுவாக திரைத்துறையில் ஒரு திரைப்படம் 100 நாள் ஓடி வெற்றி கண்டால் அதற்கு விழா எடுத்து அதில் பணிபுரிந்தவர்களுக்குச் சால்வை அணிவித்து விருது கொடுப்பார்கள்.

அதே பாணியில் கரோனா ஊரடங்கின் 100-வது நாள் நிறைவடைய இருப்பதை அடுத்து 100 நாட்கள் தொடர்ந்து பணி செய்த தூய்மைப் பணியாளருக்கு சிறப்பு செய்திருக்கிறார் கடலூரைச் சேர்ந்தவரும், ’திரு.வி.க. பூங்கா’ திரைப்படத்தின் இயக்குனருமான செந்தில்.

அவரது சொந்த ஊரான கடலூர் மாவட்டம் வண்ணாரப் பாளையத்தில் அவர் வீடு இருக்கும் பகுதியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிபவர் லதா. இவர் அசாதாரணமான சூழ்நிலையில்கூட எதையும் பொருட்படுத்தாமல் ஒருநாள் கூட விட்டுவிடாமல் தினமும் பணிக்கு வந்திருக்கிறார்.

அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிந்த அவரது பணியைப் பாராட்டி அவருக்கு, கடலூர் வண்ணாரப்பாளையம் வார்டுக்கு உட்பட்ட சிறந்த தூய்மைப் பணியாளர் என்ற விருதினை செந்தில் இன்று வழங்கி சால்வை அணிவித்துக் கவுரவப்படுத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''தூய்மைப் பணியாளர்களை மதிப்போம் அவர்களை நம் உறவினர்களாகப் பார்ப்போம். அவர்களால்தான் நம் பாரதம் மணக்கிறது'' என்றார்.

தூய்மைப் பணியாளர் விருது வாங்கிய லதா, ''ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வியர்வையுடன் செல்வேன், இன்று சால்வையுடன் செல்கிறேன். இது மகிழ்ச்சியான தருணம்'' என்று உணர்வுபூர்வமாகக் கூறினார்.

SCROLL FOR NEXT