இந்த ஆண்டு குலுக்கலில் தேர்வானவர்கள் ஹஜ் பயணத்துக்குச் செல்ல இயலாத நிலையில், அடுத்த ஆண்டு ஹஜ் பயணத்துக்கு அவர்களை முன்னுரிமை கொடுத்து அனுப்ப வேண்டும் என்று மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்எல்ஏ, அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வருக்கு மு.தமிமுன் அன்சாரி எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
''கரோனா நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு இந்தியாவில் புனித ஹஜ் பயணம் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனால் தமிழக ஹஜ் கமிட்டியின் சார்பில் குலுக்கலில் தேர்வானவர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். அவர்களின் கவலையைப் போக்கும் விதத்தில் இந்த ஆண்டு (2020) புனித ஹஜ் பயணம் செய்யத் தேர்வானவர்கள் அனைவரையும் அடுத்த ஆண்டு குலுக்கலின்றி ஹஜ் பயணம் செய்ய முன்னுரிமை அளித்து அனுமதிக்க வேண்டும்.
இது தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுக்கு உரிய முறையில் கோரிக்கை வைத்து, எதிர்பார்ப்பில் இருக்கும் மக்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்''.
இவ்வாறு தமிமுன் அன்சாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.