மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தொற்றாளர்கள் வசிக்கும் பகுதிகளை அடையாளப்படுத்துவது போல், புறநகர்ப் பகுதிகளிலும் கரோனா தொற்றாளர்கள் வசிக்கும் பகுதியை அடையாளப்படுத்தி பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர்.
சென்னையை அடுத்து மதுரையில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் கரோனா தொற்று உறுதியாகும் நபர்கள் வசிக்கும் தெருக்கள் அடைக்கப்பட்டு வெளியாட்கள் அந்த தெருவுக்குள் நுழையாதவாறும், அந்த தெருவில் வசிப்பவர்கள் வெளியே வராதவாறும் தடை ஏற்படுத்தப்படுகிறது. இந்த நடவடிக்கையால் கரோனா பரவல் தடுக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக மதுரை மாநகராட்சியை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிலர் தனியார் மருத்துவமனைகளிலும், பலர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் சிலரோ வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்வதாக கூறி வந்துள்ளனர்.
மாநகராட்சி பகுதியில் நடைபெறுவது போல் கரோனா தொற்றாளர்கள் வசிக்கும் புறநகர் பகுதிகளை தனிமைப்படுத்தி அடையாளப்படுத்தப்படுவதில்லை.
இப்பகுதியில் கரோனா தொற்றாளர்கள் இருப்பதாக எச்சரிப்பதும் இல்லை. எப்போதும் போல் சர்வ சாதாரணமாக காணப்படுவதால் கரோனா தொற்றாளர்கள் இருப்பது தெரியாமல் பொதுமக்கள், குழந்தைகள், முதியவர்கள் நடமாடி வருகின்றனர். கரோனா தொற்றாளர்களும் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர்.
பக்கத்து வீட்டினருடன் சகஜமாக பேசி வருகின்றனர். இதனால் மற்றவர்களுக்கும் கரோனா பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
எனவே, மதுரையின் புறநகர் பகுதிகளில் கரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா தொற்றாளர்கள் வசிக்கும் பகுதிகளை தனிமைப்படுத்தவும் அல்லது இப்பகுதியில் தொற்றாளர்கள் இருப்பதை தெரிவித்து பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து கரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.