தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், அரசின் ஒவ்வொரு அசைவையும் குறைகூறி வருகிறார். ஆனால், அவரது மகனே நோய் பரப்பக் காரணமாகலாமா? என்று தமாகா இளைஞரணித் தலைவர் யுவராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
''நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், குறிப்பாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் ஊரடங்கு விதி கடுமையாக்கப்பட்டுள்ளது. வெளியில் செல்ல வேண்டும் என்றால், இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் 24 மணி நேரமும் காவல் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். தற்போது தமிழகத்தில் 5 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இருந்து, சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்புவோரை, உரிய பரிசோதனைக்குப் பின் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும், கரோனா தடுப்பு சிறப்பு மையங்களை ஏற்படுத்தி, 14 நாட்கள் தனிமைப்படுத்துகிறார்கள்.
மாவட்ட நிர்வாகங்களைத் தமிழக அரசு முடுக்கிவிட்டு, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் இந்த சூழ்நிலையில் உதயநிதி முறையாக தனது பெயரில் இ- பாஸ் பெறாமல் சென்னையிலிருந்து சாத்தான் குளத்தில் இறந்துபோன ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறியுள்ளார்.
நோயின் தாக்கம் அதிகமாகப் பரவும் இந்தச் சூழ்நிலையில் உதயநிதி இ- பாஸ் இல்லாமலேயே எப்படி வந்தார்?, அவரை செக் போஸ்ட் காவலர்கள் எவ்வாறு அனுமதித்தார்கள், எத்தனையோ பேருக்கு நியாயமான காரணம் இருந்தும் மறுக்கப்படும் இ-பாஸ் இவருக்கு எப்படிக் கிடைத்தது ?, மாவட்டம் டூ மாவட்டம் இருசக்கர வாகனத்தில் கூட முறையான இ- பாஸ் இல்லாமல் போகக் கூடாது என்ற சட்டம் காற்றில் பறந்த மாயம் என்ன? அங்கு அவர்கள் சமூக இடைவெளியைக் கூட முறையாகப் பின்பற்றவில்லை.
சாதாரணமாக சென்னை மக்களை மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்தி பரிசோதனை நடத்தி முடிவு வரும் வரை ஒரு நாள் தனிமைப்படுத்தி வைத்து சொந்த வீட்டுக்குச் செல்லவேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. ஆனால், இதையெல்லாம் உதயநிதி பின்பற்றினாரா? நோயை வைத்து, அரசியல் செய்து வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், அரசின் ஒவ்வொரு அசைவையும் குறைகூறி வருகிறார். ஆனால், அவரது மகனே இவ்வாறு நடந்துகொண்டு நோய் பரப்பக் காரணமாகலாமா? உதயநிதிக்குத் தனிச் சட்டமா? நோயின் தாக்கத்தை உணர்ந்து இனியாவது அரசு கூறும் அறிவுரைகளைக் கேட்டு நடக்குமாறு தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்''.
இவ்வாறு யுவராஜா தெரிவித்துள்ளார்.