கடந்த 2, 3 வாரங்களில் சிகிச்சை முறையில் முன்னேற்றங்கள் வந்துள்ளதாக மருத்துவ நிபுணர் குழுவைச் சேர்ந்த மருத்துவர் ராமசுப்ரமணியம் தெரிவித்தார்.
தமிழக அரசு அமைத்துள்ள 19 நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் இன்று முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இதன் பின்னர் மருத்துவர் ராமசுப்ரமணியம் தெரிவித்ததாவது:
“நிறையப் பேர் கரோனா குறித்துப் பயப்படுகிறார்கள். 80 சதவீதத்துக்கு மேல் இந்த அறிகுறி மென்மையான ஒன்றாக உள்ளது. யாருக்கும் சிறு அறிகுறி இருந்தால்கூட தயவுசெய்து தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். சோதனை முடிவு வர இரண்டு மூன்று நாட்கள் ஆனாலும் கூட தனிமையில் இருங்கள். நிறைய பேர் அவர்கள் வெளியில் சுற்றுவதால் வியாதி பரவ வாய்ப்பு அதிகரித்துள்ளது.
எண்ணிக்கை அதிகரிக்கும்போது நாம் சிகிச்சை மீது கவனம் செலுத்துவது அதிகரிக்கவேண்டும். கடந்த 2, 3 வாரங்களில் சிகிச்சை முறையில் முன்னேற்றங்கள் வந்துள்ளன. ஸ்டீராய்டு உதவும் என்று சொல்கிறார்கள், எதிர்வினையாற்றும் வைரஸ் சிகிச்சை, ரத்தம் உறைதலைக் குறைக்க மருந்து கொடுக்கப்படுகிறது. இதெல்லாம் கடைசி சில வாரங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் ஆகும்.
இதை ஒருமுகப்படுத்தி வழிகாட்டுதலாக்கி, அனைத்து மருத்துவமனைகள், அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஒரே மாதிரி சிகிச்சைக்காக அரசுக்குப் பரிந்துரைத்துள்ளோம். ஒரு நோயாளி வந்தால் அவருக்கு ஆக்சிஜன் உடனடியாக அவசியமாக உள்ளது.
வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு ஆக்சிஜன் அளவைச் சோதிக்க பல்ஸ் ஆக்சி மீட்டர் உள்ளிட்டவற்றை வழங்கிக் கண்காணிக்கிறோம். யாருக்கு ஆக்சிஜன் செறிவூட்டல் 94-க்கு கீழ் குறைகிறதோ உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டுவரும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஊடகமும் எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும், இதுபோன்ற விஷயங்களை மக்களிடம் கொண்டு செல்லவேண்டும். பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியில் வராதீர்கள். சின்ன சின்னத் தடுப்பு முறைகள் மூலம் நோய் பரவுதலைத் தடுக்கலாம். பொதுமக்கள் அரசு, மாநகராட்சி சொல்வதைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
நோய்த்தொற்று அதிகரிக்கும்போது மரண விகிதம் அதிகரிப்பது இயல்பான ஒன்று. இதைக்கண்டு பயப்படுவதைவிட இதைத் தடுக்க யோசிப்பதுதான் முக்கியம். முழு ஊரடங்கு தனித்துவமான ஒன்று. பெரிய ஆயுதம் ஆகும். அது கோடரியை எடுத்துக் கொசுவைக் கொல்வது போன்றது. கண்டிப்பாக ஊரடங்கினால் பயன் வந்துள்ளது. அதற்காக ஊரடங்கை இன்னும் ஆறு மாதம் நீட்டிப்பதில் பயனில்லை. தற்போது ஊரடங்கை நாங்கள் பரிந்துரைக்கவில்லை. கட்டுப்பாடுகள் குறித்து மட்டுமே தெரிவித்துள்ளோம்''.
இவ்வாறு மருத்துவர் ராமசுப்ரமணியம் தெரிவித்தார்.
மருத்துவர் குகானந்தம் பேசியதாவது:
''மக்கள் மத்தியில் பீதி அதிகம் உள்ளது. மருத்துவமனைக்குச் செல்லப் பயப்படுகிறார்கள், அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லவேண்டும். மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்து அதற்கான சிகிச்சைகள் செய்யப் பரிந்துரைத்தோம். சென்னையைப்போல மற்ற மாவட்டங்களிலும் சிகிச்சைகள் அளிக்கப் பரிந்துரைத்துள்ளோம்.
மற்ற மாநிலங்களிலிருந்து மாவட்டங்களுக்கு 3,500 பேர் வரை வந்துள்ளனர். அதனால்தான் தொற்று எண்ணிக்கை அதிகரித்தது.
மக்கள் மத்தியில் கை கழுவுவது, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது குறைந்துள்ளது. அதனால்தான் முழு ஊரடங்கை அமல்படுத்தப் பரிந்துரைத்தோம், அதில் நல்ல பலன் கிடைத்தது. அதற்காக ஊரடங்கை நீட்டிக்க முடியாது. அதில் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளன.
மக்கள் மத்தியில் விழிப்புணர்வு வர வேண்டும். நோய்த்தொற்று இருந்தால் மருத்துவமனைக்குச் சென்று சோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். நோய்த்தொற்று அதிகரிப்பது குறித்த விஷயங்களை ஆய்வு செய்து வருகிறோம். உடல் நோய்கள், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவை உள்ள மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.
மக்கள் மத்தியில் அரசின் அனைத்து விழிப்புணர்வும் போய்ச் சேரவேண்டும். மக்கள் நோயிலிருந்து விடுதலையாக வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். சோதனைகள் நடத்த நடத்த நோய்த்தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அதைச் சிகிச்சை அளிக்க அளிக்க நோய்த்தொற்று, மரணவிகிதம் குறையும். தற்போது சிகிச்சைக்குத் தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களும் உள்ளன. மாநிலம் முழுவதும் ஒரே மாதிரி மருந்துகள், உபகரணங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
நகரங்களில் மிக நெருக்கமான பகுதிகள், சிறிய பகுதிகளில் மக்கள் நெருக்கமாக வாழ்கிறார்கள். அதனால் தொற்று அதிகரிக்கும். அதனால்தான் அந்தந்தப் பகுதிகளிலேயே மருத்துவ முகாம் அமைத்து நோய்த்தொற்று உள்ளவர்களை அதிக அளவில் கண்டறிய வேண்டும். பொதுமக்களும் நோய்த்தொற்று அதிகம் இருக்கும் பகுதிகளில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்”.
இவ்வாறு மருத்துவர் குகானந்தம் தெரிவித்தார்.