தமிழகம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கோவில்பட்டியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

எஸ்.கோமதி விநாயகம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோவில்பட்டியில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று (ஜூன் 29) நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே கரோனா தொற்று பரவலால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் சிதைந்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களை வதைப்பதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில், இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களை மேலும் துன்பப்படுத்தும் வகையில் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோவில்பட்டியில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பயணியர் விடுதி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் நகர தலைவர் எஸ்.சண்முகராஜ் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட துணைத்தலைவர் வி.எஸ்.திருப்பதி ராஜா, ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மகேஷ்குமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். நகர துணைத்தலைவர் வேல்சாமி, மாவட்ட செயலாளர் முத்து, நகர தலைவர் நல்லமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.

SCROLL FOR NEXT